2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பு மாவட்டத்துக்கு மேலும் 131 குடும்பங்களுக்கு வீடுகள்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 ஜனவரி 21 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தில், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மேலும் 131 குடும்பங்களுக்கான 3ஆவது கட்ட இந்திய வீட்டுத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

இது தொடர்பான நிகழ்வு, இந்திய வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளின் பங்கேற்புடன் மாவட்டச் செயலகத்தில் மாவட்ட செயலாளர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் நேற்று (20) இடம்பெற்றது.

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கரடிப்பூவல் கிராமத்தில், இந்த வீடமைப்புத் திட்டம் அமுலாக்கப்படவுள்ளது.

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட 5,000 இந்திய வீட்டுத் திட்டத்தில், மட்டக்களப்பு மாவட்டத்தில் 2871 வீடுகள் முன்னாள் மாவட்ட செயலாளர் சறோஜினிதேவி சார்ள்ஸின் நிருவாகக் காலகட்டத்தில்,  பூரணமாகவும் வெற்றிகரமாகவும் அமைக்கப்பட்டன.

அதன் முழுமையான வெற்றியையடுத்து, அரசாங்க அதிபர் சறோஜினிதேவியின் வேண்டுகோளுக்கு அமைய, மேலதிகமாக மேலும் 270 வீடுகள் இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டன.

இதையடுத்து, ஏனைய மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படாது விடுபட்ட மேலும் 131 வீடுகளையும் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு வழங்கும் விசேட திட்டத்தின் கீழ் தற்போது 3ஆவது கட்ட இந்திய வீடமைப்புத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

வீடமைப்புத் திட்டம் சம்பந்தமாக ஆராய மட்டக்களப்புக்கு வந்த இந்திய அதிகாரிகள் குழுவில், புதுடில்லியிலுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளரும் நிதியியல் ஆலோசகருமான கலாநிதி சுமீத் ஜெராத் தலைமையில் அபிவிருத்தி மற்றும் கட்டுமானத் துறையின் ஆலோசகர் பங்கஸ் குமார் சிங், பதவி நிலைச் செயலாளர் கலாநிதி எம். சிவகுரு, கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அபிவிருத்திப் பிரிவு கவுன்சிலர் டி.சி. மஞ்சுநாத், பொருளாதார வர்த்தகப் பிரிவு முதல் செயலாளர் சுஜா மேனன் ஆகியோர் அடங்கியிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .