2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மட்டு. மாவட்டத்தில் அதிகமான வேலைத்திட்டங்கள் ‘முடிவுறும் தருவாயில்’

கே.எல்.ரி.யுதாஜித்   / 2018 நவம்பர் 26 , பி.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகமான வேலைத்திட்டங்கள் முடிவுறும் தருவாயில் இருப்பதாகவும் அனேகமான வேலைத்திட்டங்கள் இவ்வருட இறுதியில் நிறைவுறுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுவதாகவும், மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் மா.உதயகுமார் தெரிவித்தார்.

மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் இன்று (26) காலை நடைபெற்ற 2018ஆம் ஆண்டுக்கான செயலாற்றுகை விசேட மீளாய்வுக் கூட்டத்திலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி சசிகலா புண்ணியமூர்த்தி, பிரதம கணக்காளர் கே.ஜெகதீஸ்வரன், பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலகங்களின் கணக்காளர்கள், பிரதி மற்றும் உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதன்போது, மட்டக்களப்பு மாவட்டத்தில் 39 தலைப்புகளின் கீழ் செயற்படுத்தப்படுகின்ற அபிவிருத்தித் திட்டங்களின் வேலை முன்னேற்றம் தொடர்பாகவும் எதிர்காலத்தில் செயற்படுத்தப்படவேண்டிய திட்டங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.

குறிப்பாக பன்முகப்படுத்தப்பட்ட வரவு – செலவுத் திட்டம், மீள்குடியேற்றத் வேலைத்திட்டம், கம்பெரலிய, கிராமசக்தி வேலைத்திட்டம்,  மக்களுடைய அடிப்படை வசதிகள், உட்கட்டுமானம் தொடர்பான அனைத்து வேலைத்திட்டங்களும் ஒவ்வொன்றாக ஆராயப்பட்டன.

இங்கு கருத்துத் தெரிவித்த மாவட்ட செயலாளர், மட்டக்களப்பு மாவட்டத்தில், 2018ஆம் ஆண்டில், 4,828 வேலைத்திட்டங்கள் இனங்காணப்பட்டதாகவும் 2,126.56 மில்லியன் ரூபாய் நிதியில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இவற்றுக்கொன சுமார் 600 மில்லியன் ரூபாய் நிதி செலவிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், 67 சதவீதமான பௌதீக முன்னேற்றங்களைத் தாம்  அடைந்திருப்பதாகவும் அந்த அடிப்படையில், நிதிச் செலவீனங்களும் போதியளவில் நடைபெற்றிருக்கின்றனவென்றும் தெரிவித்தார்.

மேலும், இக்கூட்டத்தின் போது , வேலைத்திட்டங்களை விரைவாகப் பூரணப்படுத்துதல் தொடர்பாகவும், அவற்றில் உள்ள இடர்பாடுகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டன. அத்துடன், மேலதிக செயற்பாட்டின் தேவைகள் குறித்தும் ஆராயப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .