2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘முஸ்லிம் அரசியல் தலைமைகள் தனித்துவத்தை இழந்து விட்டன’

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 டிசெம்பர் 23 , பி.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொண்டதன் மூலம், முஸ்லிம் அரசியலில், பேரம் பேசும் சக்தியையும் தனித்துவத்தையும், முஸ்லிம் அரசியல் தலைமைகள் இழந்து விட்டன என, ஐக்கிய சமதானக் கூட்டமைப்பின் தவிசாளர் பசீர் ஷேகுதாவூத் தெரிவித்தார்.

ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் முதலாவது பேராளர் மாநாடு, காத்தான்குடி, ஹோட்டல் பீச்வே மண்டபத்தில் இன்று (23) நடைபெற்ற போது, அங்கு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த மாநாட்டில், ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.ரி.ஹசன் அலி உட்பட கட்சியின் பொருளாளர், உயர் பீட உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள், அதன் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரபுக்கான பிராத்தனை இடம்பெற்றதுடன், கட்சியின் புதிய உயர் பீட உறுப்பினர்கள் அறிமுகம் செய்துவைக்கப்பட்டனர் என்பதுடன் கணக்கறிக்கை, ஆண்டறிக்கை என்பனவும் வாசிக்கப்பட்டன.

இதில் தொடர்ந்து உரையாற்றிய பசீர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, எதிர்க்கட்சியில் இருப்பது போல, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் தற்போது எதிர்க்கட்சியில் இருந்திருந்தால், சரியாக, சமத்துவமாக தமிழ் அரசியல் சக்திகளோடு, தமிழ்ப் பிரதிநிதிகளோடு இருந்து பேசுகின்ற சக்தி, முஸ்லிம்களுக்குக் கிடைத்திருக்கும் என்றார்.

எனினும், அமைச்சுப் பதவிகளை எடுத்தவுடனே அந்தச் சக்தி இல்லாமாலாகிவிட்டதாகவும் இன்னுமொரு பகுதியைக் கூடக் கூட எடுப்பதற்கு இன்னுமொரு போராட்டமும் செய்கின்றார்கள் என்றும் அவர் சாடினார்.

இந்த அமைச்சுப் பதவிகளால் முஸ்லிம் சமூகத்துக்கு ஒன்றும் கிடைக்கப் போவதில்லை எனக் குறிப்பிட்ட அவர், மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரப், இனப் பிரச்சினைக்கான தீர்வில் முஸ்லிம்களுக்கு சமத்துமவான பங்கு வேண்டுமெனக் கூறினார் எனச் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது என்றும் அந்த நீதி இன்னுமொரு சமூகத்தை சுட்டுவிடக் கூடாதெனவும் அதற்காக சரியான உரையாடல்களைச் செய்வது, பேரம் பேசுதல்களை முஸ்லிம் சக்திகள் செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

எனவே, தனித்துவமான தலைவர் அஸ்ரபின் கொள்கையை மீண்டும் நிலை நிறுத்துகின்ற கட்சியாகத்தான், இந்த ஐக்கிய சமதானக் கூட்டமைப்பை உருவாக்கியுள்ளதாகவும் தங்களுக்குப் பதவி தேவையில்லை என்றும் தவிசாளர் பசீர் தெரிவித்தார்.

​தனக்கும் ஹஸன் அலிக்கும் இருக்கின்ற ஒரேயொரு கடமை, இவ்வளவு அனுபவங்களையும் சுமந்து வந்து சரியான பாதைக்கு முஸ்லிம் அரசியலை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்பதேயாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .