2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’முஸ்லிம்களுக்கு உரியதென நான் கூறவில்லை’

பேரின்பராஜா சபேஷ்   / 2017 ஓகஸ்ட் 18 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

"வாழைச்சேனை, முறாவோடை சக்தி வித்தியால மைதானக் காணி முஸ்லிம்களுக்குரியது என, நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறியது கிடையாது" என,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

"எனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில், மஹிந்த ராஜபக்ஷ எம்.பியின் விசுவாசிகளும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கட்சிக்காரரும் இணைந்து, நான் தெரிவிக்காத ஒன்றை திட்டமிட்டுப் புனைந்து எனக்கு கெதிராக ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர்" எனவும் அவர் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு, முறாவோடை சக்தி வித்தியால மைதானக் காணி முஸ்லிம்களுக்குரியது என, யோகேஸ்வரன்  எம்.பி கூறினார் எனக் குற்றம் சுமத்தி, அவருக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பாக மக்களைத் தெளிவுப்படுத்தும் வகையில், இன்று (18)  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் "மட்டக்களப்பு நகரில், கடந்த 16ஆம் திகதி புதன்கிழமை மங்களராமய விகாராதிபதியுடன் இணைந்து செயற்படும் சிலர், எனக்கு எதிராக ஆர்பாட்டம் மேற்கொண்டு கொடும்பாவி எரித்து யோகேஸ்வரன் ஒழிக, கள்ளன், தமிழ் ஹாஜியார் யோகேஸ்வரன் என கோசமிட்டதைப் செய்திகள் வாயிலாக அறிந்துகொண்டேன.

வாழைச்சேனை, முறாவோடை சக்தி வித்தியாலய மைதானத்துக்கு 125 வருடங்களாக முஸ்லிம்கள் உரிமையாளராக இருப்பதாக நான் கூறியதாக, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நபர் சுட்டிக்காட்டினார்.

குறித்த நபர், மஹிந்த ராஜபக்ஷவின் தீவிர விசுவாசி. கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தலில்களில் அவரது வெற்றிக்காக பிரசாரங்களில் ஈடுபட்டவர். தற்பொழுது அவரது ஆதரவாளர்களுடன் இணைந்து செயற்படுகிறார். மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதியுடன் நேரடித் தொடர்புவைத்துள்ளார்.

முறாவோடை சக்தி வித்தியால மைதான காணி முஸ்லிம்களுக்குரியது என, நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறியது கிடையாது. அந்தப் பகுதியில், அவர்கள் 125 வருடமாகவோ அல்லது பூர்வீகமாகவோ வசிக்கின்றார்கள் என்றும் கூறியது கிடையாது. நான் தெரிவிக்காத ஒன்றை இவர்கள் திட்டமிட்டு புனைந்து ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

இது மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டமாகும். மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ண தேரர், மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளராகச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார். அவருடன் இணைந்து கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டுள்ளார்கள்.

அவர்கள், ஆர்ப்பாட்டம் செய்ததைப் பற்றியோ அல்லது பொம்மை எரித்ததைப் பற்றியோ நான் கவலைப்படவில்லை இது பொய்யானதொரு நடவடிக்கை. நான் எப்போதும் எமது மக்களின் சார்பாக இருப்பவன் நீதி நியாயம், தர்மத்தை கடைப்பிடிதேயாகுவேன்.

நான் கூறாத ஒன்றை கூறியதாக குற்றம் சுமத்தி எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டது தொடர்பாக நீதிமன்றம் செல்ல நடவடிக்கை மேற்கொண்டு வருகிறேன். எனது சட்டத்தணி ஊடாக அறிக்கை அனுப்புவதற்கு ஏற்பாடு செய்துள்ளேன். நான் கூறிய கருத்தை அவர்கள் நிருபிக்க வேண்டும்.

குறித்த தேரர் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களுக்கு பல துரோகங்களை இழைத்துவந்துள்ளதை அறிந்திருந்தும் ஒருசிலர் அவருடன் இணைந்து செயற்படுவது மிகவும் வேதனையளிக்கிறது" என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .