2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

“மூன்று கட்சிகளை சேர்ந்த நாங்கள் ஒன்றாக இணைந்து பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்வோம்”

வா.கிருஸ்ணா   / 2017 டிசெம்பர் 17 , பி.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்கள் அரசியல் ஞானம் பெற்றவர்களாக இருப்பதனால் இந்த தேர்தலை எதிர்கால தீர்வுடன் ஒப்பிட்டு தமிழ் மக்கள் உறுதியான நிலைப்பாட்டை எடுப்பார்கள் என்பதில் எந்தவித ஐயப்பாடுமில்லை என்பதனால், எந்தவொரு கட்சியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சவாலாக எடுக்காது என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் டெலோ என அழைக்கப்படும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் அரசியல் குழு உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் இன்று(17)தெரிவித்தார்.

உள்ளுராட்சிசபைகள் தொடர்பான பங்கீடுகள் தொடர்பில் தமிழரசுக்கட்சிக்கும் டெலோவுக்கும் இடையில் இருந்த முரண்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இம்முறை பாரிய வெற்றியைப்பெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்>

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் சம்பந்தமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த பதினான்காம் திகதி நான்கு சபைகளுக்கான வேட்பு மனுவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கையளித்திருக்கின்றது.

ஏறாவூர் பற்று, ஏறாவூர் நகரம், கோறளைப்பற்று, மண்முனைப்பற்று ஆகிய நான்கு சபைகளுக்கான வேட்புமனுவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தாக்கல் செய்ததுடன், நேற்றைய தினம் காத்தான்குடி தவிர்ந்த ஏனைய மட்டக்களப்பு மாவட்டத்தின் நான்கு சபைகளுக்கான கட்டுப்பணத்தை நாங்கள் செலுத்தியிருக்கின்றோம்.

கடந்த சில வாரங்களாக உள்ளுராட்சி மன்றத் தேர்தல் சம்பந்தமாக பல குழப்பங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருந்ததாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. எங்களுக்குள் எந்தவிதமான குழப்பங்களும் இருக்கவில்லை.

மேலும், கருத்து முரண்பாடுகள் அனைத்தும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் அவர்களின் காரியாலயத்தில் இடம்பெற்றக் கூட்டத்தில் இறுதி முடிவு எட்டப்பட்டு, நாங்கள் ஒரு உடன்பாட்டிற்கு வந்துள்ளதுடன், மூன்று கட்சியை சேர்ந்த தலைவர்களும் கையொப்பமிட்டு தீர்மானங்களை எடுத்திருக்கின்றோம்.

அதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நாங்கள் இரண்டு, மூன்று நாட்களாக தொகுதிப் பங்கீடு சம்பந்தமாக கூடிப் பேசியிருந்தோம். தற்போது அவ்விடயத்திலும் உடன்பாடுகள் எட்டப்பட்டிருக்கின்றன.

அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில், உள்ளுராட்சி மன்றத்  தேர்தலில் மூன்று கட்சிகளை சேர்ந்த நாங்கள்  கூட்டாக இணைந்து பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு, அனைத்து சபைகளிலும் பெரும்பான்மையான வெற்றியை பெறுவதற்கு உறுதி பூண்டிருக்கின்றோம்.

தமிழ் மக்கள் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இருப்பார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இருக்க வேண்டிய தேவையும் இருக்கின்றது. ஒரு உறுதியான தீர்வுத் திட்டம் கொண்டுவரப்பட வேண்டுமாக இருந்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிச்சயமாக வெற்றி பெற வேண்டும். இந்த தேர்தல் அதற்கு ஒரு ஆணையாக அமைய வேண்டியதாக இருக்கும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று அதற்கான பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டிருக்கின்றது. நாங்கள் நிரந்தர அரசியல் தீர்வொன்றை பெற்றுக்கொள்வதற்கு முயற்சித்துக்கொண்டிருக்கின்றோம்.

ஆனால் எங்களை திருப்திப்படுத்தாத அரசியல் தீர்வாக அது அமையுமானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எக்காரணம் கொண்டும் அதனை ஏற்றுக்கொள்ளாது என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை உறுதியாக இருக்கின்றது எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X