2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மோட்டார் சைக்கிளால் இழுத்துச் செல்லப்பட்ட யுவதி படுகாயம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 நவம்பர் 14 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

அதிவேகமாகச் சென்ற இரண்டு மோட்டார் சைக்கிள்களில் ஒன்றால் மோதுப்பட்ட நிலையில், பின்னால் வந்த மற்றைய மோட்டார் சைக்கிளால் இழுத்துச் செல்லப்பட்ட யுவதி, நினைவிழந்த நிலையில் மீட்கப்பட்டு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாரென, ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர், 5ஆம் குறிச்சியைச் சேர்ந்த வி. வினித்தா (வயது 21) என்ற  யுவதியே, நேற்று (13) மாலை இடம்பெற்ற மேற்படி விபத்தில் படுகாயமடைந்துள்ளார்.

இவ்விபத்துடன் தொடர்புடைய இளைஞர்கள் அறுவர் கைதுசெய்யப்பட்டுள்ளனரெனவும் ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

இந்த யுவதி, கடமை நேரம் முடிந்து கால்நடையாக வீடு நோக்கிச் செல்லும்வேளையில்,  மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையை, பாதசாரிக் கடவை ஊடாகக் கடந்துள்ளார்.

அப்போது, அதிவேகமாக வந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களில் ஒன்று முன்னதாக யுவதியை மோதியுள்ளது. அதன்போது கீழே விழுந்த அவர், பின்னால் வந்த மற்றைய மோட்டார் சைக்கிளால் இழுத்துச் சென்று வீசப்பட்டுள்ளார்.

படுகாயமடைந்த நிலையில் காணப்பட்ட யுவதியை, உதவிக்கு விரைந்தோர் மீட்டெடுத்து, உடனடியாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யுவதி, மட்டக்களப்பு போதனா வைத்திசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

இதனையடுத்து, ஒவ்வொரு மோட்டார் சைக்கிலும் தலா மூன்று பேராக தலைக்கவசமும் அணியாமல் வேகக் கட்டப்பாட்டை இழந்து பயணித்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டதோடு, அவர்கள் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இச்சம்பவம் பற்றி ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .