2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

யானைகள் அடித்து 16 பேர் உயிரிழப்பு

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 மே 24 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரண்டு வருடங்களில் யானை அடித்து, 16 பேர் உயிரிழந்துள்ளனரென, மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.முஹம்மட் றியாஸ் தெரிவித்தார்.

தரவுகளின்படி, 2017ஆம் ஆண்டு 12 பேரும் இவ்வாண்டின் இதுவரைக்குமான காலப்பகுதியில் 4 பேரும், யானைகள் அடித்து உயிரிழந்துள்ளனரெனவும் அவர் குறிப்பிட்டார்.

2017ஆம் ஆண்டு யானைகள் தாக்கிய 26 பேர் காயமடைந்துள்ளனர் என்பதுடன், 76 பேரின் உடமைகள் யானைகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளன என்பதுடன், 7,258,861 ரூபாய் பெறுமதியான இழப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், இவ்வாண்டு இதுவரைக்குமான காலப்பகுதியில், சுமார் ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான இழப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 2017ஆம் ஆண்டு, யானைகளின் தாக்கங்களால் 83 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றில், போரதீவுப்பற்று (வெல்லாவெளி) பிரதேச செயலாளர் பிரிவிலேயே அதிகளவான குடும்பங்கள் என்ற வகையில் 45 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, “மட்டக்களப்பு மாவட்டத்தில் வெல்லாவெளி, வவுணதீவு, செங்கலடி, கோறளைப்பற்று மத்தி, வாகரை, பட்டிப்பளை, வாழைச்சேனை, கிரான் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளே, யானைகளின் தாக்கம் அதிகமாக உள்ள பிரதேச செயலகப் பிரிவுகளாகும்.

“இங்கு 408 கிலோமீற்றர் அளவான மின் வேலிகள் அமைக்கப்படல் வேண்டும். எனினும், 147 கிலோமீற்றர் அளவான மின் வேலிகளே இங்கு அமைக்கப்பட்டுள்ளன. இதன்படி, இன்னும் 261 கிலோமீற்றருக்கு மின் வேலிகள் அமைக்கப்பட வேண்டியுள்ளது” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .