2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ரணவிரு சேவா திட்டத்தில் நிர்மாணிக்கப்படும் வீடுகள் குறித்து திருப்தி

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 மார்ச் 22 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

'ரணவிரு சேவா' அதிகார சபையால் மூவினத்தைச் சேர்ந்த ரணவிரு குடும்பங்களுக்காக, மட்டக்களப்பு மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் 39 வீடுகளின் முன்னேற்றங்கள் குறித்து ஆராய்ந்து கொள்வதற்காக, மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. ஜே. ஜாகொட ஆராச்சி தலைமையிலான  அதிகாரிகள் குழுவினர், இன்று (22) கள விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

ரணவிரு சேவா திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்ட அதிகாரி ரீ.எச். கீர்திகா ஜயவர்தன, மட்டக்களப்பு மாவட்ட ரணவிரு சேவா அமைப்பின் பொருளாளர் ஏ. லிங்கராஜா உட்பட இன்னும் சில அதிகாரிகள் மட்டக்களப்பு நகரம் மற்றும் ஏறாவூர் ஆகிய பிரதேசங்களில் நிருமாணிக்கப்பட்டுள்ள வீடுகளைப் பார்வையிடுவதற்காக, இந்த கள மேற்பார்வை விஜயத்தில் பங்குபற்றியிருந்தனர்.

குறிப்பிட்ட காலப்பகுதிக்கு முன்னதாகவே பலர் இந்த வீடுகளை சிறந்த முறையில் தங்களது முழுப் பங்களிப்போடு நிர்மாணித்திருப்பதையிட்டு, மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. ஜே. ஜாகொட ஆராச்சி பூரண திருப்தி வெளியிட்டார்.

குடியிருக்க வீட்டு வசதிகள் கூட இன்றி கவனிப்பாரற்ற முறையில் சிரமத்தோடு வாழ்ந்து கொண்டிருந்த தங்களுக்கு, இந்த வீடுகள் ரணவிரு சேவா திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்ட அதிகாரி ரீ.எச். கீர்திகா ஜயவர்தனவின் முழு முயற்சியால் கிடைத்திருப்பது மிகுந்த நிம்மதியை அளிப்பதாக பயனாளிகள் களவிஜயம் செய்திருந்த மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் தெரிவித்தனர்.

வாழைச்சேனை, ஏறாவூர், மட்டக்களப்பு நகர், காத்தான்குடி, களுவாஞ்சிக்குடி, பட்டிப்பளை, வவுணதீவு மற்றும் மங்களகம ஆகிய இடங்களில் தலா 19 வீடுகள் தமிழ், முஸ்லிம் சமூக ரணவிரு குடும்பங்களுக்கும் 1 வீடு சிங்கள சமூக ரணவிரு குடும்பத்துக்கும் ஒவ்வொன்றும் தலா 22 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவிலமைந்த இந்த வீடுகள் நிருமாணிக்கப்பட்டுள்ளன.

இந்த வீட்டு நிருமாண வேலைகள் தற்போது நிறைவுற்றுள்ள நிலையில் அவற்றை பயனாளிகளிடம் கையளிக்கும் ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காகவே அதிகாரிகள் இந்த நேரடி அவதானிப்பை மேற்கொண்டிருந்தனர்.

யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் மரணித்த, காணாமல்போன, அல்லது சம்பவங்களின்போது அங்கவீனமடைந்த படையினர் மற்றும் பொலிஸாரில் தங்கி வாழ்ந்த 136 குடும்பங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் வசிக்கின்றனர்.

இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 'ரணவிரு சேவா' பயனாளிக் குடும்பங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்டோருக்கான வீடமைப்புத் திட்டம் தற்போது அமுலாகிக் கொண்டிருக்கின்றது.

வீட்டு வசதிகளைத் தவிர ரணவிரு குடும்பங்களின் வாழ்வாதாரம் மற்றும் அக்குடும்பங்களிலுள்ள இளைஞர், யுவதிகளின் தொழில்வாய்ப்பையும் கருத்திற் கொண்டு, பல்வேறு சுயதொழில் பயிற்சி நெறிகள் வழங்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .