2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘வடக்கு, கிழக்கில் பதிலடி கொடுக்கவும்’

Editorial   / 2018 ஓகஸ்ட் 07 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.விஜயரெத்தினம்

தமிழ் மக்களின் கட்சிகள் உடைக்கப்படுவதோடு, சின்னாபின்னமாக்கப்படுகின்றன எனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன், அதற்கான பதிலடியை, வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் பதிலடி கொடுக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.

அத்துடன், வட, கிழக்கிலுள்ள அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் தமிழ் அமைப்புகளும் ஒன்றிணைந்து செயற்படுமாறும் அழைப்பு விடுத்த அவர், இதன்மூலமே வடக்கும் கிழக்கும் இணைந்த சமஷ்டி ஆட்சியைப் பெறுவதில் எந்தவிதமான ஐயப்பாடுகளும் தோன்றாது என்றும் தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தல் சம்பந்தமாக, ஸ்ரீநேசன் எம்.பியின் அலுவலகத்தில், நேற்று (06) மாலை நடைபெற்று ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், "தமிழர்களின் போராட்டம் மாறலாம்; போராட்டத்தின் வடிவங்கள் மாறலாம். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எண்ணங்கள் ஒருபோதும் மாறாது" என்று உறுதிபடத் தெரிவித்தார்.

அத்துடன், இந்த நாட்டிலே எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வுத் திட்டத்தை, த.தே.கூ தலைவர் இரா. சம்பந்தன் முன்னெடுத்து வருகின்றார் என்றும், அத்தீர்வுத் திட்டத்துக்கு வடக்கிலும் கிழக்கிலுமுள்ள அனைத்துத் தமிழர்களும் தமிழ்க் கட்சிகளும் ஒன்று சேரக்கூடிய நிலைப்பாட்டில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், வடக்கிலும் கிழக்கிலும், த.தே.கூட்டமைப்புக்கு ஏற்பட்ட பின்னடைவுகளை ஏற்றுக்கொண்ட அவர், எனினும் அப்பின்னடைவுகள், அவ்விரு மாகாணங்களிலுமுள்ள அனைத்துத் தமிழர்களுக்கும் ஏற்பட்ட பின்னடைவுகளாகும் என்று குறிப்பிட்டார்.

"இந்தப் பின்னடைவுகள், பெரும்பான்மையினப் பேரினவாதக் கட்சிகளால் ஏற்படுத்தப்பட்டு, தமிழர்களை அடக்கி, ஒடுக்கி ஆளுவதற்குப் போடப்பட்ட சதித்திட்டம்" எனக் குறிப்பிட்ட ஸ்ரீநேசன் எம்.பி, தமிழ் இனத்தை அடக்கி வாழலாம் என்பது பகற்கனவு என்றும், இவ்வாறான முன்னெடுப்புக்கு தமிழர்கள் ஒருபோதும் துணையிருக்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.

மேலும், இச்செயற்பாட்டை தடுத்து நிறுத்தவேண்டுமென்றால், ஒவ்வொரு தமிழரும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும் என்று கோரிய அவர், அப்போதுதான், தமிழர்களுக்கான உரிமைக்குரல் தேசியத்திலும் சர்வதேசத்திலும் ஒலிக்குமெனவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .