2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் வெளியேறினால் ‘கூட்டமைப்புக்குப் பின்னடைவு’

வா.கிருஸ்ணா   / 2018 செப்டெம்பர் 24 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் வெளியேறினால், அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு பின்னடைவை ஏற்படுத்துவதற்குரிய வாய்ப்பாக இருக்குமென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) அரசியல் பிரிவான, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் 30ஆவது நிறைவையொட்டி, முத்து விழா, மட்டக்களப்பு, கிரான்குளம், சீமூன் கார்டன் விடுதியில், நேற்று (23) மாலை நடைபெற்றது. அங்குவைத்தே, இக்கருத்தை, நாடாளுமன்ற உறுப்பினர் வெளிப்படுத்தினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து எந்தக் கட்சி வெளியேறினாலும், அதனால் தமிழ் மக்களுக்கே பாதிப்பாக இருப்பதுடன், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் துரோகமாகவும் அமையுமெனத் தெரிவித்தார்.

அத்துடன், வட மாகாண முதலமைச்சர் விடயத்தில், மிகவும் கவனமான முடிவுகளை எடுக்கவேண்டும் என்பதில், தங்களுடைய கட்சித் தலைமை மிகவும் கவனமாக இருந்து வருகின்றதெனவும், வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருக்கவேண்டுமென்றும், அவர் வெளியேறிச் செல்லக்கூடாது என்பதில், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி மிகவும் கவனமாக இருக்கின்றதெனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், கூட்டமைப்பை வலுப்படுத்தி, பலப்படுத்தி, கொள்கையுடன் இணைந்து செல்லக்கூடியவர்களை இன்னும் உள்வாங்கிக்கொண்டு, தமிழ் மக்களுக்கான தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் பயணிக்க வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, இந்நிகழ்வுக்குத் தலைமை தாங்கிய ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன், வட மாகாண முதலமைச்சர் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், தமிழர்களின் பலத்தைப் பலவீனமாக்கும் சூழ்நிலையை ஏற்படுத்துமெனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .