2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

‘வன்முறைகளை தாங்கும் சக்தி தமிழ் மக்களிடம் இல்லை’

வா.கிருஸ்ணா   / 2019 ஜனவரி 04 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

புலம்பெயர் உறவுகள் கடினப்போக்கை கடைப்பிடிக்குமாறு கூறுவதாகவும் அவ்வாறு செய்யும்போது வன்முறைகள் ஏதும் உருவாகுமானால் அதனைத் தாங்கும் சக்தி தமிழ் மக்களிடம் இல்லை என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

2005ஆம்ஆண்டு விட்ட பிழையை மீண்டும் விடக்கூடாது என்பதற்காகவே, கூட்டமைப்பு, குழப்பமான அரசியல் சந்தர்ப்பத்தில் ஒரு பக்க ஆதரவு தீர்மானத்தை எடுத்தாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குருமண்வெளிப் பகுதியில் கம்பெரலியத் திட்டத்தின் கீழ், 20 இலட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட கலைமகள்  மகா வித்தியாலய வீதி, இன்று (04) திறந்துவைக்கப்பட்டது.

குருமண்வெளி பிரதேச கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட சிறிநேசன் எம்.பி மேலும் உரையாற்றுகையில், இன்று அரசாங்கம் நிமர்ந்து நிற்பதற்கு காரணமாக அமைந்தது தமிழ் தேசிய கூட்டமைப்பு என்றும் கூட்டமைப்பு செயற்பட்டிருக்காவிட்டால் இன்று தேர்தல் காலமாகவே இருந்திருக்குமென்றும் சுட்டிக்காட்டினார்.

அரசியல் குழப்ப நிலையின்போது, சிறுபான்மை கட்சிகள் உறுதியாக இருந்ததன் காரணமாக சூழ்ச்சிகரமான முறையில் ஆட்சியை கவிழ்த்தவர்களுக்கு தக்க பாடம் புகட்டியுள்ளதாவும் தெரிவித்த அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது சில விமர்சனங்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.

புலம்பெயர்ந்த உறவுகள் சில விமர்சனங்களைச் செய்கின்றனர் என்றும் கடும்போக்கைக் கடைப்பிடிக்குமாறு கூறுகின்றனர் என்றும் தெரிவித்த அவர், கடும்போக்கை கடைப்பிடிக்கும்போது, மீண்டுமொரு வன்முறை உருவாகுமானால் அதனைத் தாங்கும் சக்தி தமிழ் மக்களிடம் இல்லையென்றார்.

இருக்கின்ற ஜனநாயக பெரும்பான்மை பலத்தை வைத்துக்கொண்டுதான் சாணக்கியமான பாதையில்சென்று உரிமைகளைப்பெறவேண்டிய நிலையில் உள்ளதாகவும் எந்த விதத்திலும் சோரம்போய், முட்டுக்கொடுத்து ஏமாந்து செல்பவர்களாக நாங்கள் இல்லாமல் பெறக்கூடியவற்றைப் பெற்றுக்கொண்டு எங்கள் அரசியல் முன்கொண்டுசெல்ல விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த கால அரசியல்சூழ்நிலையின்போது நடுநிலை வகிக்குமாறு சிலர் கூறினர். குறிப்பாக கஜேந்திரகுமார் போன்றவர்கள் இவ்வாறு தெரிவித்திருந்தனர்.நாங்கள் நடுநிலை வகித்திருந்தால் மஹிந்த ஆட்சியமைத்திருப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.

“முல்லைதீவு மாவட்டத்திலுள்ள காணாமல்போன உறவுகள் எந்தக் காரணம் கொண்டும் எங்களைக் கொத்துக்கொத்தாக கொன்றொழித்தவர்கள், எங்கள் உறவுகளைக் கடத்திக் காணாமல் செய்தவர்களுக்கு எந்தவகையிலும் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பை வழங்கக் கூடாது என எங்களுக்கு கடிதம் தொடர்ச்சியாக அனுப்பியிருந்தனர்.

“யார் வெல்லவேண்டும் என்பதை விட யார் தோற்கடிக்கப்படவேண்டும் என்பதில் அவர்கள் கவனமாக இருந்தார்கள்.கடந்தகாலத்தில் தமிழ் மக்களுக்கு பல்வேறு இன்னல்களைச் செய்தவரை தோற்கடிக்கவேண்டும் என முடிவு செய்தபோது தனாகவே அது வேறு ஒருவருக்கு வெற்றியாக அமைந்துவிட்டது.

“2005ஆம் ஆண்டு நாங்கள் ஒரு தவறை செய்தோம். ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க, மஹிந்த ராஜபக்ஸ என இருவர் போட்டியிட்டபோது எமது போராளிகள் அவசரமான முறையில் தீர்மானித்து வட, கிழக்கு மக்கள் வாக்களிக்ககூடாது என அறிவித்தனர். அதனால் தமிழ் மக்கள் வாக்களிக்காத காரணத்தினால் அதிகளவான வாக்குகளைப்பெற்று மகிந்த ஆட்சிக்குவந்தார்.

“அதன்பின்னர் யுத்தம் தீவிரப்படுத்தப்பட்டு, தமிழ் மக்கள் சொல்லொண்ணா துன்பங்களுக்கு ஆளாகினர். அந்தத் தவறை மீண்டும் விடக்கூடாது என்பதற்காகவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்தத் தீர்மானத்தை எடுத்தது.

“கெரளவமான முறையில் அரசாங்கத்திடமிருந்து பெற்று அபிவிருத்திகளைச்செய்யவேண்டுமே தவிர, எங்களை விலையாக்கி, அந்தப் விலைபொருட்களை வைத்துக்கொண்டு அபிவிருத்தி செய்வது என்பது தன்மானத்தைக் காவுகொடுத்துவிட்டுச் செய்யும் அபிவிருத்திகளுக்குத் துணைபோகமாட்டோம்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .