2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வரட்சியின் மத்தியிலும் ‘டெங்குத் தொற்று அதிகரிப்பு’

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 ஓகஸ்ட் 01 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போதைய கடும் வரட்சியான காலநிலைக்கு மத்தியிலும், ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் டெங்குக் காய்ச்சலின் தாக்கத்துக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளதென, பிரதேசத்துக்குப் பொறுப்பான சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம். தாரிக் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, ஏறாவூர் நகர சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் முன்னெடுக்கப்பட்டு வரும் டெங்குத் தொற்றுக் கட்டுப்பாடு, விழிப்புணர்வு நடவடிக்கைகள் சம்பந்தமாக நேற்று (31) விவரம் வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது,

“ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி நிர்வாகப் பிரிவில் இவ்வருடம் மொத்தமாக 537 டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளார்கள்.

“ஏறாவூர் நகரத்திலே டெங்கு நுளம்புகளின் தாக்கம் குறைந்திருந்தாலும் புறநகர்ப் பகுதிகளிலே குறிப்பாக ஐயன்கேணிப் பிரதேசத்தில் டெங்கு நுளம்புகளின் தாக்கம் அதிகரித்திருக்கிறது.

“4 பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பிரிவிலிருந்தும் இவர்கள் இவ்விதம் டெங்குத் தாக்கத்துக்கு உள்ளாகியிருக்கின்றார்கள்.

“ஏறாவூர் 1 பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பிரிவில் 109 நோயாளிகளும், பிரிவு 2இல் 131 நோயாளிகளும், பிரிவு 3இல் 150 நோயாளிகளும், மிச்நகர் மற்றும் மீராகேணி பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பிரிவிலே 139 நோயாளிகளும் அடையாளம் காணப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்கள். இவற்றிலே, மிச்நகர் கிராமத்திலே ஒரு மரணம் சம்பவித்துள்ளது.

“ஏறாவூர் நகர சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகக் கூடிய சூழலைக் கொண்டிருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில்,  ஜுலை மாத முடிவு வரை சுமார் 152 பேருக்கெதிரான வழக்குகள், ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்திலே தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன.

“சுகாதாரப் பகுதியினர் நடவடிக்கை எடுத்து, எவ்வளவுதான் வழக்குத் தாக்கல் செய்தாலும் பொதுமக்கள் விழிப்படையாதவரை டெங்குத் தாக்கத்தை இந்தப் பிராந்தியத்திலிருந்தே ஒழிப்பதென்பது கேள்விக்குட்பட்டதாகவே இருந்து கொண்டிருக்கும்.

“டெங்கு நுளம்புகளை ஒழிப்பதில் பல்வேறு சவால்களை சுகாதாரத் துறையினர் எதிர்நோக்கி வருகின்றனர்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .