2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

விவசாயக் காணிகளில் ‘கபளிகரத்தை நிறுத்தவும்’

கே.எல்.ரி.யுதாஜித்   / 2018 ஒக்டோபர் 09 , பி.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கச்சைக்கொடி கிராம சேவையாளர் பிரிவிலுள்ள, கெவிளியாமடு கிராமத்தில் கறுவாச்சோலை, தேத்தாத்தீவு காணிகளை, அம்பாறை மாவட்டத்துக்குரிய காணியாக மாற்றுவதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளைத் தடுத்து நிறுத்துமாறு, கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெத்தினம், மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் மா. உதயகுமாரிடம், எழுத்துமூலமாக முறையிட்டுள்ளார்.

தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளில், 50 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளை, பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களால் அடாத்தாக விவசாயம் மேற்கொள்வதும் அதனை அம்பாறை மாவட்டத்துக்குரிய காணிகளாக மாற்ற முனைவதும் கண்டிக்கத்தக்கதென்றும், அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில், மாவட்ட செயலாளருக்கு இன்று (09) அவர் கையளித்துள்ள கடிதத்தில், “1984ஆம் ஆண்டுக்கு முதல், பல தசாப்தங்களாக, கெவிளியாமடு கிராமத்தில் 104 தமிழ்க் குடும்பங்கள் வாழ்ந்து வந்தன" என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

“இக்குடும்பங்களுக்குக் குடியிருப்பதற்கும், விவசாயம் செய்வதற்குமான அரச காணி, ஒப்பங்கள் மூலம் தலா மூன்று ஏக்கர் வீதம் வழங்கப்பட்டு, இக்காணிகளில் நிரந்தர வீடுகளும் அமைத்து, விவசாயச் செய்கைகளும் செய்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

“எனினும், யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த தமிழர்கள், சில வருடங்களாக இப்பகுதிக்குச் செல்ல முடியாத அச்ச சூழ்நிலை ஏற்பட்டது. இக்காலகட்டத்தில், சிலரது விவசாயக் காணிகளில், பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களால் அடாத்தாக விவசாயம் செய்யப்பட்டு வந்துள்ளது.

“தற்சமயம் தங்கள் காணிகளில் விவசாயம் செய்வதற்காகச் சென்றபோது, இக்காணிகளை, அவர்கள் அடாத்தாகப் பிடித்து வைத்துள்ளமை தெரியவந்துள்ளது.

“பூர்வீகமாக வாழ்ந்துவந்த தமிழர்களின் காணிகளை, இப்படி அபகரிப்பது நியாயமல்ல, எனவே, இவ்விடயத்தில் தலையிட்டு, தமிழர்களுக்குரிய காணிகளை பெற்றுக் கொடுப்பதோடு, இக்காணி எல்லைகள், மட்டக்களப்பு மாவட்டத்துக்குரியதென உறுதிப்படுத்துங்கள்" எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .