2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

’1,000 ரூபாயில் மாற்றமில்லை; அரசாங்கம் பின்வாங்காது’

Editorial   / 2021 ஜனவரி 27 , மு.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 மகேஸ்வரி விஜயனந்தன்

சம்பள நிர்ணய சபையின் மூலம் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை 1,000 ரூபாய் வரை அதிகரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க, அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதெனத் தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல, தொழிலாளர்களுக்கான 1,000 ரூபாய் சம்பளம் வழங்குவதில் அரசாங்கத்தால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தில், எவ்வித மாற்றமும் இல்லை என்றார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (26)  நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமைச்சர்,
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2021 வரவு - செலவுத் திட்ட உரையின் போது, தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் சம்பளம் வழங்குவது தொடர்பில் உறுதியளிக்கப்பட்டது. எனினும், 920 ரூபாய் மாத்திரமே அதிகரிக்கப்படும் என்ற முடிவில், முதலாளிமார் சம்மேளனம் விடாப்பிடியாக உள்ளது. 

'இந்த விடயங்களைக் கருத்தில் கொண்டு, வரவு-செலவுத்திட்ட யோசனையை செயற்படுத்தும் வகையில், சம்பள நிர்ணய சபை மூலம் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை அதிகரிப்பதற்குத் தேவையான நடவடிக்கையை எடுக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது' என்றார். 

இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை தொழில் உறவுகள் அமைச்சர் நிமல் ஸ்ரீபால டீ சில்வா சமர்ப்பித்தார். 
இதேவேளை, பெருந்தோட்ட நிறுவனங்களுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை செய்து கொள்ளப்புடும் கூட்டொப்பந்தத்துக்கு அமைய, 50 ரூபாய் நிலையான விலைக்கொடுப்பனவு உள்ளிட்ட 750 ரூபாய் நாளாந்த சம்பளமாகவும் உற்பத்தித் திறன் மற்றும் நியம கிலோ கிராம் அளவு அதிகரிக்குமாயின்  'Over Kilo Rate''   எனும் பெயரில் மேலுமொரு கொடுப்பனவுடன் சேர்த்து, தற்போது தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், கூட்டொப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுக்கும் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கும் இடையில் இந்தக் கூட்டொப்பந்தம் தொடர்பில் சில முரண்பாடுகள் காணப்படுகின்றன. முதலாளிமார் சம்மேளனம், இந்தக் கூட்டொப்பந்த காலப்பகுதியை 4 வருடங்களாக அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ள நிலையில், தொழிற்சங்கங்கள் 2 வருடத்துக்கே கூட்டொப்பந்தம் செய்ய முடியும் என்ற நிலையிலிருந்து மாறவில்லை.

எனவே, இந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் அதேவேளை, 1,000 ரூபாய் கொடுப்பனவில் எவ்வித மாற்றமும் அரசாங்கத்திடம் இல்லையென அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் முதலாளிமார் சம்மேளனத்திடமிருந்து பிரச்சினைகள் ஏற்பட்டால், சம்பள நிர்ணய சபையின் ஊடாக 1,000 ரூபாய்  வழங்குவதிலிருந்து அரசாங்கம் பின்வாங்காது என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X