2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அக்குறணை பிரதேசத்தில் குப்பை சேகரிப்பு நிறுத்தம்

மொஹொமட் ஆஸிக்   / 2019 ஜனவரி 16 , பி.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்குறணை பிரதேச சபைக்குள் உள்ள குப்பைகளைச் சேகரிக்கும் பணிகளை, தற்காலிகமாக நிறுத்தி வைக்கவுள்ளதாக, அக்குறணை பிரதேச சபைத் தவிசாளர் ஐ.எம். இஸ்திஹார் தெரிவித்தார்.  

அலவத்துகொடையில் அமைந்துள்ள பிரதேச சபை அலுவலகத்தில், இன்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்துக் கருத்துத் தெரிவித்த அவர், அக்குறணை பிரதேச சபையால், அலவத்துகொடை - இயால்காமம் பிரதேசத்தில் நடத்தப்பட்டுவரும் கொம்போஸ்ட் தயாரிக்கும் நிலையத்துக்கு, அப்பிரதேச மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகக்  கூறினார்.  

அக்குறணை பிரதேசத்துக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும், இயால்காமம் பகுதியிலேயே ​கொட்டப்பட்டு, கொம்போஸ்ட் உரம் தயாரிக்கப்பட்டு வருகின்றது. 

எனினும், அப்பிரதேசத்தைச் சுற்றியுள்ள வீடுகளில் வாழும் மக்கள், இந்தக் குப்பைகள், தங்களது பிரதேசங்களில் கொட்டப்படுவதால், பாரிய சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் ஒவ்வொரு நாளும், ஈக்கள், நுளம்புகளின் தொல்லை அதிகரித்து வருவதாகவும், இதனால், தங்களது பிள்ளைகளின் உடல்நலம் பாதிக்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.  

எனவே, இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகளைக் கொட்டுவதற்கான தீர்வொன்றை இனங்காணும் வரையில், குப்பைகள் சேகரிக்கும் பணிகள், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுமென்று, அவர் தெரிவித்தார்.  

இந்த உரம் தயாரிக்கும் நிலையம், தன்னுடைய அதிகாரித்துக்குட்பட்டது கிடையாது என்று தெரிவித்துள்ள அவர், இது தொடர்பாக, ஜனாதிபதிக்குக் கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளதாகவும் அங்கிருந்து, இதற்கான தீர்வு விரைவில் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .