2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அங்கத்துவப் பிரச்சினையால் மோதல்: நால்வருக்கு விளக்கமறியல்

ஆ.ரமேஸ்   / 2020 ஜனவரி 02 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

உடபுஸ்ஸலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட என்வீக் கீழ்ப் பிரிவு தோட்டத்தில், நேற்று முன்தினம் (01), மாலை, இரண்டு கட்சிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக, படுகாயமடைந்த மூவர், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என, ​உடபுஸ்ஸலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், இந்தத் தாக்குதல் சம்வத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நால்வரையும் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, வலப்பனை நீதவான் நீதிமன்ற நீதவான், நேற்று (02), உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, தாக்குதல் சம்பவத்தை நடத்திய பின்னர், தலைமறைவாகியுள்ள மேலும் இருவரை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த டிசெம்பர் மாத நடுப்பகுதியில், தொழிற்சங்கங்களுக்குப் புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் தொழிலாளர் தேசிய சங்க உறுப்பினர்களும் இளைஞரணிகளும் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது, உடபுஸ்ஸலாவ என்வீக் கீழ்ப்பிரிவு தோட்டத்தில், சுமார் 70 பேர், தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளில் இருந்து விலகி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கு, தங்களது சந்தா அங்கத்துவப் படிவங்களை வழங்கியிருந்தனர்.

இதனால் முரண்பட்ட தொழிலாளர் தேசிய சங்க உடபுஸ்ஸலாவ பகுதி தலைவர், அவருடைய மகன்கள் உள்ளிட்ட மேலும் சிலர், நேற்று முன்தினம் (01) மாலை, என்வீக் தோட்டக் காரியாலய வளாகத்தில், இ​லங்கை தொழிலாளர் காங்கிரஸ் இ​ளைஞரணியைச் சேர்ந்த மூவருடன், வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன், அவர்களை தாக்கியும் உள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த மூவரும், தோட்ட மக்களால் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதல் மேற்கொண்ட நால்வரைக் கைது செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .