2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் ‘அரச அதிகாரிகள் பங்கேற்பது அவசியம்’

Editorial   / 2018 மார்ச் 13 , பி.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

பிரதேச அபிவிருத்தி இணைப்புக்குழுக் கூட்டங்களில், அரச திணைக்களங்களின் அதிகாரிகள் பங்கேற்பது அவசியமென்று வலியுறுத்தியுள்ள பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார், இந்த விடயத்தில், அரச அதிகாரிகள், கூடிய கவனம் செழுத்த வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தார்.

ஹப்புத்தளை மற்றும் ஹல்துமுள்ளை பிரதேச அபிவிருத்தி இணைப்புக் குழுக்கூட்டங்கள், தியத்தலாவ சனசமூக நிலைய மண்டபத்திலும் ஹல்துமுள்ளை பிரதேச செயலக மண்டபத்திலும், நேற்று (13) நடைபெற்றன. இந்தக் கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், அரசாங்கத்தால் வழங்கப்படும் அனைத்துவிதமான வளங்களும், ஹப்புத்தளை மற்றும் ஹல்துமுள்ளை பிரதேசங்களில் வாழ்ந்துவரும் சிறுபான்மையின மக்களுக்கும் சமமாகப்  பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென்றும் எக்காரணம் கொண்டும், பிரதேசங்களுக்குக் கிடைக்கப்பெறும் நிதி, மீளவும் திறைசேரிக்கு அனுப்பி வைக்கப்படக்கூடாதென்றும் அறிவுறுத்தினார்.

பிரதேச அபிவிருத்தி இணைப்புக்குழுக் கூட்டங்களில், பிரதேசங்களின் அனைத்து அரச உத்தியோகத்தர்களும் பங்கேற்கபது அவசியமென்று கூறிய அவர், ஒரு சில அதிகாரிகள், பல்வேறு காரணங்களை முன்வைத்து, பிரதேச அபிவிருத்தி இணைப்புக்குழு கூட்டங்களில் பங்கேற்பதில்லை என்றும் தெரிவித்தார்.

சில அதிகாரிகள், தமது பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவும் இவ்வாறான கூட்டங்களில் பங்கேற்பதில்லை என்று தெரிவித்த அவர், பிரதேசங்களின் அபிவிருத்திகள் தொடர்பாக முன்வைக்கப்படும் பிரச்சினைகளை நிவர்த்திசெய்ய முடியாதுள்ளதாகவும் இவ்வாறான அதிகாரிகளால், பிரதேசங்களின் அபிவிருத்தி பாதிக்கப்படுவதோடு, பொதுமக்களும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்வதாகவும் கூறினார்.

ஒரு சில அதிகாரிகளின் அசமந்தப் போக்கினால், பல அபிவிருத்திசார் பிரச்சினைகளுக்குத் தீர்வு எட்டப்படாத நிலை காணப்படுகின்றதென்றும் மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில், தாமே அவற்றுக்குப் பதில் கூற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

எனவே, பிரதேச அபிவிருத்தி இணைப்புக்குழுக் கூட்டங்களில், திணைக்கள அதிகாரிகள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் பங்கேற்பது அவசியமாகுமென்று, அவர் மேலும் வலியுறுத்தினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X