2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அரசாங்கத்தை மாற்றுவதற்காக அக்கரப்பத்தனையில் சத்தியாக்கிரகம்

ஆ.ரமேஸ்   / 2018 பெப்ரவரி 18 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டை ஆட்சி செய்வதற்கான தகுதியை நல்லாட்சி அரசாங்கம் இழந்துவிட்டது எனவும், எனவே தகுதியிழந்த இந்த அரசாங்கத்தை கலைத்துவிட்டுப் புதிய அரசாங்கத்தை உருவாக்க, நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட வேண்டும் என வலியுறுத்தியும் அக்கரப்பத்தனை, வழிப்பிள்ளையார் ஆலயத்துக்கு முன்பாக, சத்தியாக்கிரகப் போராட்டமொன்று, நேற்று (18) முன்னெடுக்கப்பட்டது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தோட்டத் தொழிலாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டத்தில், குறித்த சங்கத்தின் அக்கரப்பத்தனை பிரதேச இணைப்புச் செயலாளர் பொ.ஜெயராஜ் தலைமையிலான ஏழு பேர், பதாதைகளை ஏந்தியவாறு ஊர்வலம் வந்ததுடன் வழிப்பிள்ளையார் ஆலயத்துக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தில், தேங்காய் மற்றும் ஏனையப் பொருட்களை தொங்கவிட்டு, சத்தியாக்கிரகத்தில் ஈடுப்பட்டனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த சத்தியாக்கிரக ஏற்பாட்டாளரும் சங்கத்தின் இணைச் செயலாளருமான பொ.ஜெயராஜ்,
நாட்டை அபிவிருத்திச் செய்யக்கூடிய தலைவர் யார் என்பதை, நடந்து முடிந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கூடாக, மக்கள் தெளிவாக உறுதிப்படுத்திவிட்டனர் எனத் தெரிவித்த அவர், இன்று நல்லாட்சி என்ற பெயரில் இயங்கும் அரசாங்கத்தை, மலையக மக்கள் மட்டுமன்றி நாட்டில் பல பிரதேசங்களிலும் வாழும் மக்களும் வெறுத்துவிட்டனர் என்றும் கூறினார்.

அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றம், அரசாங்க நிர்வாகங்களின் முறையற்ற செயற்பாடுகள் இவை அனைத்தையும் விட, பிணைமுறி விவகாரம், இதனால் ஏற்பட்டுள்ளப் பாதிப்பை உணர்ந்த மக்கள், முன்னாள் ஜனாதிபதியின் தலைமைத்துவத்தை விரும்பியே, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு வாக்களித்தனர் எனத் தெரிவித்த அவர், இதன்மூலம் நாட்டை அபிவிருத்தியூடாகக் கட்டியெழுப்பி, மக்களைப் பட்டினியற்ற வாழ்க்கைக்குக் கொண்டு செல்லக் கூடிய தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ என்பதை உணர்த்திவிட்டனர் என்றும் கூறினார்.
கடந்த இரண்டரை ஆண்டுகளாக, நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதாகக் கூறிக்கெண்டு மறைமுகமாக ஊழலில் இவ்வரசாங்கம் ஈடுபட்டு வந்தது எனவும், அவ்வரசாங்கம் தமக்குத் தேவையில்லை என்றும் சாடிய அவர், வெளிநாட்டுக் கடனில் இருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டுமென்று கூறி, இந்த அரசாங்கம் முறையற்றவகையில் அரசாங்க நிர்வாகங்களின் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதாகவும், மக்களுடைய சேமிப்புப் பணங்களை சூறையாடியதாகவும் குற்றஞ்சாட்டினார்.

நல்லாட்சி மீது மக்கள் நம்பிக்கையிழந்துவிட்டதாகவும் மக்களின் நம்பிக்கையை இழந்த இந்த அரசாங்கம் தமக்குத் தேவையில்லை என்றும் கூறிய அவர், நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தலைவரை நியமிக்க வேண்டும் என்பதை அரசாங்கத்துக்கு தெளிவுபடுத்துவதற்காகவே, இத்தகைய சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .