2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’ஆட்சி பலத்தை தேசிய மக்கள் சக்திக்கு தாருங்கள்’

Editorial   / 2019 செப்டெம்பர் 23 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஆ.ரமேஸ், எஸ்.கணேசன், எஸ் சதீஸ்

இலங்கையில், 72 ஆண்டுகளாக வீணடிக்கப்பட்ட நாட்டை, புதிய நாடாக கட்டி எழுப்புவதற்கு, ஆட்சி பலத்தை, தேசிய மக்கள் சக்திக்கு வழங்குகள் என்று, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருமான அநுர குமார திஸாநாயக்க அழைப்பு விடுத்தார்.

ஹட்டனில், நேற்று (22) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

இலங்கை அரசாங்கம், இதுவரை காலமும், தனவாதிகளின் அரசாகச் செயற்பட்டது என்றும் இதை முடிவுக்கு கொண்டு வந்து, உழைப்பாளர்களின் உணர்வு புரிந்த அரசாங்கமாக மாற்றிக் காட்டுவோம் என்றும் அவர் சூளுரைத்தார்.

நாட்டைக் கட்டியெழுப்பவும் பெற்றக் கடன்களைத் திருப்பிச் செலுத்தவும் நாட்டுக்குள்ளேயே பணம் உள்ளது என்று கூறிய அவர், அந்தப் பணம், நம் நாட்டு அரசியல்வாதிகளின் வீட்டுக்குள்ளேயே உள்ளது என்றும் கூறினார்.

மக்களுடைய பொது சொத்துகளைச் சுரண்டிய அரசாங்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, அந்தச் சொத்துகளை மீண்டும் அரசாங்கத்துக்கே சொந்தமாக்கும் வகையிலான ஆட்சியை அமைப்போம் என்றும் குடும்ப ஆட்சிகளுக்கு இடங்கொடுக்காது, ஊழல் நிறைந்த ஆட்சிகளுக்கு இடங்கொடுக்காது, புதிய அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதற்கு, மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்குமாறு அவர் அழைப்பு விடுத்தார்.

தோட்டத் தொழிலாளர்கள் என்றாலே, கொழும்பிலுள்ள ஹோட்டல்களிலும் வீட்டு வேலைக்கும் விடுதிகளைக் கவனிக்கவும் வேலைக்கு அமர்த்த முடியும் என்று நினைப்பதாகவும் இந்த நிலைமை, முற்றாக இல்லாதொழிப்பதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதாகவும் அவர் கூறினார்.

அரசியல்வாதிகள் சிலர், அமைச்சரவையில் ஒன்றாக இருந்துகொண்டு அரசியல் இலாபம் தேடுவதற்காக, இனங்களுக்கிடையே வேறுபாடுகளை உருவாக்குகின்றனர் என்றும் தாம் ஆட்சிக்கு வந்தால், அவ்வாறான அரசியல்வாதிகளை காலி முகத்திடலுக்கு அழைத்துச் சென்று கல்லெறியச் செய்வோம் என்றும் கூறினார்.

அண்மையில் மலர்ந்த தாமரை மொட்டில், 2000 மில்லியன் ரூபாய் ஊழல் ஏற்பட்டதாக ஜனாதிபதி தெரிவித்திருந்ததைக் குறிப்பிட்ட அவர், அந்த ஊழல் ஏற்படாமல் இருந்திருந்தால், நுவரெலியாவில் 200 பாடசாலைகள் கட்டியமைத்திருக்கலாம் என்றும் கூறினார்.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில், அமெரிக்க டோன் நிறுவனத்துக்கு, கிராந்துரு கோட்டை, களுவத்தை, செவனகல பிரதேசம், பொலன்னறுவை சோமாவதி தூபிக்கு அருகில் என, 2000 தொடக்கம் 5000 வரையிலான ஏக்கர் நிலங்கள் வழங்கப்பட்டுள்ளது என்று கூறிய அவர், ஆனால், மலையக தோட்ட தொழிலாளர்களுக்கு 7 பேர்ச் வீதம்,  இந்த அரசாங்கத்துக்கு வழங்க முடியவில்லை என்றும் கூறினார்.

உரிமைகள் மறுக்கப்பட்டு அடுக்கி ஒடுக்கி வாழும் இந்த நாட்டு மக்களுக்கு வெளிநாட்டு கடன்கள் அல்லாமல் உழைப்பின் சக்தியின் ஊடாக புதிய ஒரு நாட்டை கட்டியெழுப்ப எம்மோடு கைகோர்த்து செல்லுங்கள் என அழைப்பு விடுவதுடன் தலைகுணிந்து கும்பிடு போடும் கலாசாரம் மாற்றியமைக்கப்பட்டு, சகல அரச அதிகாரிகளும் மக்களும் தலை நிமிர்ந்து வாழக்கூடிய நாட்டை கட்டியெழுப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .