2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இராதாவைப் புகழ்ந்தார் முத்து

Editorial   / 2018 ஓகஸ்ட் 06 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ், எஸ்.கணேசன், ஆர்.ரமேஸ்

கல்வி இராஜாங்க அமைச்சரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவருமான கலாநிதி வே.இராதாகிருஷ்ணனுக்கு நேற்று இடம்பெற்ற கௌரவிப்பு விழாவில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவரும் பிரதியமைச்சருமான முத்து சிவலிங்கம் கலந்துகொண்டார்.

இராஜாங்க அமைச்சரின் 66ஆவது பிறந்த தினத்தையும், மலையகத்தில் 30 வருட அரசியல் சேவையும், தொடர்ந்து 22 வருட கல்விச் சேவையையும், இலண்டன் கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் கௌரவ கலாநிதிப் பட்டம் பெற்றமையையும் நினைவுகூர்ந்தே, ஹட்டன் டீ.கே.டப்ளியு மண்டபத்தில், நேற்று (05) காலை 10 மணிக்கு, இந்தக் கௌரவிப்பு விழா நடத்தப்பட்டது.

அ​ந்த வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம், “கல்வி இராஜாங்க அமைச்சராக இருக்கின்ற வேலுசாமி இராதாகிருஷ்ணன், என்றுமே எனது நல்ல நண்பர். அவரைப் போன்றதொரு நல்ல மனிதனை, நாம் இழந்துவிடக் கூடாது.

“கடந்த நடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்து, ஜெனீவாவில் நடைபெற்ற கலந்துரையாடலொன்றில் பங்கேற்பதற்காக, நான் சென்றேன். இதன்போது, விமான நிலையத்தில் வைத்து என்னை, இராதாகிருஷ்ணனே வழியனுப்பிவைத்தார். கலந்துரையாடலை நிறைவுசெய்து கொண்டு நாட்டுக்குத் திரும்பியபோது, என்னை வரவேற்பதற்கு அவர் வரவில்லை.

“அவர், மற்றோர் இடத்துக்குச் சென்றுவிட்டார். என்னைப் பொறுத்தவரையில், அது தவறில்​லை. ஏனெனில், அது அவருடைய தனிமனித சுதந்திரமாகும்” எனக் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வு தொடர்பாக அழைப்பு விடுக்கப்பட்டதும், அது தொடர்பாக, இ.தொ.காவின் தலைவரும் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமானிடம் தெரியப்படுத்திய போது, இராதாகிருஷ்ணனின் பெயரைக் கேட்டதும், இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்கும் வாழ்த்துகளைத் தெரிவிப்பதற்கும், அவர் சம்மதம் வழங்கினார் என, பிரதியமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன், தன்னை ஒரு சாதாரண மனிதராகவும் சிறந்த ஒரு தலைவராகவும் பார்த்ததாக பெருமைப் பராட்டிய பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம், தானும், அவரை அப்ப​டியே பார்த்ததாகவும், தங்களிடத்தில் எப்போதும் எவ்விதமான பாகுபாடும் இருந்ததில்லை என்றும், கடந்த காலத்தை ஞாபகமூட்டினார்.

மலையகத்தைப் பொறுத்தவரையிலும், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், நுவரெலியா மாவட்டத்தில் கோட்லோஜ் தோட்டத்துக்கு, தன்னுடைய சொந்தப் பணத்தில் மக்களுக்கு மின்சார இணைப்பைப் பெற்றுகொடுத்தவர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்வதாகக் கூறிய அவர், "மலையக மக்களுடைய ஒவ்வொரு பிரச்சினையையும் தீர்ப்பதற்கு, தயங்காது, கோபப்படாமல் சிரித்த முகத்தோடு, முன்னின்று மக்களுக்குச் சேவை செய்து​கொண்டிருக்கின்ற ஒரு மகான், வேலுசாமி இராதகிருஷ்ணன்" என்றும் அவர் பெருமை பாராட்டினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .