2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இளைஞர் படுகொலை; இரத்தினபுரியில் பதற்றம்

Editorial   / 2018 நவம்பர் 08 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணிஸ்ரீ, அஜித்லால் சாந்த உதய

 

நிவித்திகல வத்துப்பிட்டிய பிரதேசத்தில், இளைஞரொருவரின் படுகொலைக்கு காரணமானவர்களைக் கைதுசெய்யுமாறு கோரி, பிரதேச மக்கள் இரத்தினபுரி பிரதான வீதியை மறித்து, நேற்று (8) முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் காரணமாக, இரத்தினபுரியில் பதற்ற நிலை ஏற்பட்டது.

 

நிவித்திகல வத்துப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த கங்கொடவத்த சிசித சேனாரத்ன (வயது 28) என்ற இளைஞர், இளைஞர்கள் குழுவொன்றினால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி இளைஞர், யக்தெஹிவத்த சந்தியில் வியாபார நிலையமொன்ற நடத்திச் சென்றுள்ளார். வியாபார நிலையத்துக்கு, கடந்த 6ஆம் திகதி வந்த சிலர், இளைஞரிடம் குளிர்பானங்களை விலைக்கு வாங்கி அருந்தியுள்ளனர். பின்னர், சிகரெட் தருமாறு கேட்டுள்ளனர். எனினும் மேற்படி இளைஞர் சிகரெட் இல்லை என்று கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் இளைஞனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. எனினும் பிரதேச மக்கள் இணைந்து, நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இதனையடுத்து அவ்விடத்திலிருந்து சென்ற இளைஞர்கள், மீண்டும் வியாபார நிலையத்துக்கு வந்து, மேற்படி இளைஞனை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

தாக்குதலில் பலத்தகாயங்களுக்கு உள்ளான இளைஞன், வத்துப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இரத்தினபுரி வைத்தியசாலையிலிருந்து கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட இளைஞர், சிகிச்சை பலனின்றி, நேற்று (7) முன்தினம் உயிரிழந்தார்.

இச்சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்தும் இளைஞரின் கொலைக்குக் காரணமானவர்களை உடனடியாகக் கைதுசெய்யுமாறு வலியுறுத்தியுமே, பிரதேச மக்கள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரதான வீதியில் மரங்களை வெட்டி வீழ்த்தியும் டயர்களை எரித்தும் பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், இரத்தினபுரியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக கலவான - இரத்தினபுரி வீதியின் போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்பட்டது.

பதற்ற நிலையைத் தவிர்ப்பதற்காக, ஆர்ப்பாட்ட இடத்தில் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டதுடன், கலகம் அடக்கும் பொலிஸாரின் நீர் பவுசர்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

சம்பவத்துடன் தொடர்புடைய இரு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் நிவித்திகல பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .