2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

உமா ஓயா திட்டத்தால் ஏற்பட்ட ’பாதிப்புகளுக்குத் தீர்வு தருக’

Editorial   / 2018 மே 15 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

உமா ஓயா பலநோக்குத் திட்டம் காரணமாக, மாகாணத்தில், ஏழு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட 8,398 குடும்பங்கள், கடுமையான நீர்ப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளன எனச் சுட்டிக்காட்டியுள்ள, உமா ஓயா பல்நோக்குத் திட்டத்துக்கு எதிரான மக்கள் இயக்கம், இது தொடர்பில் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்வதற்கான கலந்துரையாடலில் ஈடுபடுவதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கால அவகாசமும் கோரியுள்ளது.

இது தொடர்பில் மேற்படி அமைப்பின் அமைப்பாளரும் ஊவா மாகாண சபை உறுப்பினருமான சமந்த வித்யாரத்ன, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, கடிதமொன்றை நேற்று (14) அனுப்பி வைத்துள்ளார்.

பாதிக்கப்பட்டுள்ள 8,398 குடும்பங்களில் 4,094 குடும்பங்களுக்கு, பௌசரின் மூலம் நீர் விநியோகிக்கப்பட்டு வந்தாலும், ஏனைய குடும்பங்கள் தண்ணீரைப் பெற்றுக்கொள்வதில் பாரிய சிரமங்களை எதிர்கொண்டுள்ளனவெனவும், அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உமா ஓயா திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடுகளைப் பெற்றுக்கொடுப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்தாண்டு ஜூன் மாதம் உறுதியளித்த போதிலும், சிறியளவிலான சலுகைகளையே கிடைத்தன எனக் குறிப்பிட்ட அவர், "மக்கள் போராட்டங்களை தவிர்ப்பதற்காக, சிறியளவிலான சலுகைகளே கிடைத்தனவே தவிர, மக்கள் திருப்திப்படும் வகையில், முழுமையான சலுகைகள் எவையும் இதுவரை பெற்றுக்கொடுக்கப்படவில்லை" என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதேவேளை, பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சந்திப்புகளை மேற்கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்தாண்டு ஜூன் 31 ஆம் திகதி உறுதியளித்திருந்தாலும், இதுவரை எவ்விதக் கலந்துரையாடல்களும் நடத்தப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீர்த்தட்டுப்பாடு காரணமாக, மேற்படி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையைக் கருத்திற்கொண்டு, இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கான கால அவகாசத்தை ஜனாதிபதி வழங்க வேண்டும் என்றும் அவர் அந்தக் கடிதத்தில் கோரியுள்ளார்.

உமா ஓயா பல்நோக்குத் திட்டம் காரணமாக, ஊவா பரணகம, வெலிமடை, ஹாலிஎல, பண்டாரவளை, எல்ல, ஹப்புத்தளை, வெல்லவாய ஆகிய ஏழு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட, ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள், பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்டுள்ளனரென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இத்திட்டம் காரணமாக 8,215 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன என்பதுடன், இதில் 3,279 வீடுகளுக்கு எவ்வித நட்டஈடும் வழங்கப்படவில்லை என்று குறிப்பிட்ட அவர், ஏனைய வீடுகளுக்கு நட்டஈடு வழங்கப்பட்டாலும், அவை மக்களுக்கு போதுமானதாக அமையவில்லை என்றும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X