2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

உமாஓயா திட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு “ அரசாங்கம் உதவுகிறது”

Editorial   / 2017 செப்டெம்பர் 19 , பி.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.கோகுலன்

“நல்லாட்சி அரசாங்கம் என்ற வகையில், உமாஓயா பல்நோக்கு அபிவிருத்தி வேலைத்திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை பெற்றுக்கொடுத்து வருகிறோம். ஆனால், உமா ஓயா திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்லாட்சி அரசாங்கம் எதையுமே செய்யவில்லை என்று, சில அரச சார்பற்ற நிறுவனங்கள் பொய்யான கருத்துகளை கூறி வருகின்றன. அந்நிறுவனங்கள், தொடர்ந்து இவ்வாறான கருத்துகளை கூறுமேயானால், அவர்களோடு விவாதத்தில் ஈடுபட நான் தயார்” என கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சரும், மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

உமாஓயா திட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பிலான கலந்துரையாடல், பண்டாரவளை கரந்தகொல, உமாஓயா அபிவிருத்திக் காரியாலயத்தில், அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார். இங்கு மேலும் கூறிய அவர்,

“உமாஓயா வேலைத்திட்டத்தை கடந்தகால அரசாங்கம் முன்னெடுத்தது என்று கூறி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்தத் திட்டத்தை ஒதுக்கி விடவில்லை. இந்தத்திட்டத்துக்கு நல்லாட்சி அரசாங்கமும் பொறுப்பு கூறும் நிலையில் உள்ளதால், இதற்கென விசேட அமைச்சரவை அங்கிகாரம் பெற்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்து வருகின்றது.

“இப்பகுதியில் இருக்கின்ற ஆயிரக்கணக்கான மக்களுக்கு, குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
“பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்கி வருவதுடன், சாதாரணமாக பாதிக்கப்பட்ட இடங்கள் மற்றும் வீடுகள் ஆகியவற்றில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து, அதற்கான கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

“அத்துடன், இப்பகுதியில் பாதிக்கப்பட்ட பாடசாலைகளை திருத்துவதற்கு பண உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று வீதிகளை புனரமைப்பதற்காக, இதுவரை 163 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படவுள்ளது.

“இது இவ்வாறிருக்க, தண்ணீர் பிரச்சினையை எதிர்நோக்கி வரும் இப்பகுதி மக்களுக்கு, எட்டாயிரம் நீர் தாங்கிகள் வழங்கப்படவுள்ளன. அத்தோடு பவுஸர் ஊடாக, தண்ணீரை விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பண்டாரவளையில் விசேட தண்ணீர் திட்டத்தை ஆரம்பிப்பதற்காக, இருபதாயிரம் மில்லியனுக்கான அமைச்சரவை அனுமதியும் கிடைக்கப்பெற்றுள்ளது.

இவ்வாறெல்லாம் இப்பகுதி மக்களின் குறைகள் தீர்க்கப்பட்டு வரும் நிலையில், நல்லாட்சி அரசாங்கம், உமாஓயா திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வித நிவாரணங்களையும் பெற்றுக்கொடுக்கவில்லை என்று, சில அரச சார்பற்ற நிறுவனங்கள் பொய் பிரசாரங்களை செய்து வருகின்றன.

குறைபாடுகள் இருக்கதான் செய்யும். ஆனால், ஒன்றுமே செய்யவில்லை என்று கூறுவது நல்லதல்ல” என்று அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .