2024 மார்ச் 28, வியாழக்கிழமை

‘எனக்குப் போதாது’

Kogilavani   / 2017 நவம்பர் 16 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

“எனது அமைச்சுக்கு ஒதுக்கப்படுகின்ற நிதி, பெரும்பாலும் வீடமைப்பை இலக்காகக் கொண்டே செயற்படுத்த வேண்டி இருப்பதால், பாதையமைப்பு போன்ற உட்கட்டமைப்பு விடயங்களை முன்னெடுப்பதற்கு நிதி பற்றாக்குறையாக உள்ளது. எனவே, உட்கட்டமைப்பு வசதிகளுக்காக, எதிர்வரும் வரவு- செலவுத்திட்டத்தில் தனியான நிதி ஒதுக்கீடுகளைச் செய்துதருமாறு, நிதியமைச்சரை வேண்டிக்கொள்கிறேன்” என்று, மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் ப.திகாம்பரம் தெரிவித்தார்.   

நல்லாட்சி அரசாங்கத்தின் மூன்றாவது வரவு - செலவுத்திட்டத்தின் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு கூறினார்.  

இங்கு மேலும் கூறிய அவர்,   

“எனது அமைச்சுக்கு ஒதுக்கப்படுகின்ற நிதி குறைவானதாக உள்ளபோதும், வாக்குகளை அடிப்படையாகக் கொண்டு, நுவரெலியா மாவட்டத்துக்கு மாத்திரம் சேவையாற்றாது, பெருந்தோட்டங்கள் அமைந்துள்ள அனைத்து மாவட்டங்களிலும் எனது பணிகளை முன்னெடுத்துள்ளேன்.   

“மாத்தறை, காலி, இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை, கண்டி, மாத்தளை, பதுளை, மொனராகலை மற்றும் குருநாகல் என அனைத்து மாவட்டங்களிலும், எனது பணிகளை முன்னெடுக்கும்போது, குறித்த மாவட்டங்களின் மக்கள் பிரதிநிதிகளை இணைத்துக்கொண்டு செயற்பட்டுள்ளேன்.  

“இத்தகைய பரந்த செயற்பாடுகளின்போது, அரசாங்கத்தால் எமது அமைச்சுக்கு ஒதுக்கப்படுகின்ற நிதியை முறையாகக் கையாள்வதிலும் ஒழுங்காக அரச கணக்குகளை பேணுவதிலும் கவனமாக செயற்படுமாறு, எனது அமைச்சின் செயலாளர்களுக்கும் உத்தியோகத்தர்களுக்கும் நான் பணிப்புரை வழங்கி வந்துள்ளேன். இதன் பிரதிபலனாக, இந்த நாடாளுமன்றத்தின் நிலையியல் குழுவான அரச பொதுக் கணக்குகள் குழுவால், சிறந்த நிதியியல் கட்டுப்பாட்டுகளைக் கொண்டிருந்தமைக்காக, எனது அமைச்சுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.   

“எனக்கு வாக்களித்த மக்களுக்கு, ஊழலற்ற சேவையை ஆற்றுவதற்குக் கிடைத்த வெற்றியாக நான் இதனைக் கருதுகின்றேன். இதற்காக உழைத்த அமைச்சின் செயலாளர்கள், அதிகாரிகளுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.   

மேலும், “பெருந்தோட்டக் கம்பனிகள் உட்கட்டமைப்பு விடயங்களை கவனிப்பதில் இருந்துத் தம்மை விலக்கிக்கொண்டுள்ளன. பெருந்தோட்டப் பகுதிகளில் உட்கட்டமைப்பு விடயங்களை மேற்கொள்வதற்கு என உருவாக்கப்பட்ட தனியார் நிறுவனமான பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியம், எனது அமைச்சின் கீழ் செயற்பட பணிக்கப்பட்டுள்ளது.   

ஆனாலும், அதன் முழு நிர்வாகக் கட்டுப்பாடுகளும் பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளுக்குக் கீழேயே வருகின்றன. அந்த நிறுவனத்தின் ஆளணியினருக்கு அந்த கம்பனிகளே சம்பளத்தை வழங்குகின்றன.   

“அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிறுவனத்தில் அங்கத்துவம் வகிக்கும் நிறுவனங்கள், மாதாந்தம் செலுத்த வேண்டிய நிதியை முறையாகச் செலுத்துவதில்லை. அவர்கள் வழங்குகின்ற நிதிப்பங்களிப்பு, உரிய உத்தியோகத்தர்களுக்கு சம்பளத்தை வழங்கவும் அலுவலகக் கட்டடங்களைப் பராமரிக்கவுமே போதுமானதாக உள்ளது.   

“அவர்களைக்கொண்டு செயற்படுத்தப்படும் அனைத்து அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கும் எனது அமைச்சின் ஊடாகவே, நிதி ஒதுக்கீடு செய்ய  வேண்டியுள்ளது. எனவே, எனது அமைச்சுக்கு ஒதுக்கப்படும் நிதிக்கும் அதன் கீழ் முன்னெடுக்க வேண்டிய பணிகளுக்கும் பாரிய இடைவெளி ஏற்படுகின்றது.   

“ஓர் அமைச்சின் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கும்போது, போதுமான அளவு ஆளணியினர் தேவைப்படுகின்றனர். பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிறுவனத்தை மாத்திரம் நடைமுறைப்படுத்தும் நிறுனவமாகக் கொண்டுள்ள எமக்கு, அங்கு போதிய ஊழியர்கள் இன்மையால் குறிப்பிட்ட வருட காலத்தில் உரிய பணிகளை முன்னெடுக்க முடியாமல் உள்ளது.   

“இந்த நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, எமது அமைச்சின் கீழ், தனியான அதிகார சபை ஒன்றை அமைக்கும் எனது யோசனையை அமைச்சரவை ஏற்றுக்கொண்டுள்ளது. விரைவில் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படவுள்ள அந்த யோசனைக்கு, நாடாளுமன்றத்தின் அனுமதியையும் நான் வேண்டி நிற்கின்றேன்” என்றார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X