2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

’ஐ.தே.முன்னணி 14ஆம் திகதி மீண்டும் ஆட்சி அமைக்கும்’

Editorial   / 2018 நவம்பர் 09 , பி.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன், எஸ்.சதிஸ், எஸ்.கணேஸ்

 

எதிர்வரும் 14ஆம் திகதி, ஐக்கிய தேசிய முன்னணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் தான் மீண்டும் அமைச்சுப் பொறுப்பை ஏற்பது உறுதி என்றும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் உறுதிபடத் தெரிவித்தார்.

 

நாட்டில் நிலவிவரும் தற்போதைய அரசியல் சூழ்நிலைத் தொடர்பாக, மலையக மக்களுக்கு தெளிவுபடுத்தும் கூட்டமொன்று, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் ஏற்பாட்டில், ஹட்டன் டீ.கே.டபிள்யூ மண்டபத்தில், இன்று (9) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே, அவர் இவ்வாறுத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், புதிய பிரதமரொருவர் நியமிக்கப்பட்டமையை, தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கோடிக் கணக்கில் விலை பேசி அழைப்புகள் வந்தபோதும், தமிழ் முற்போக்குக் கூட்டணி உறுப்பினர்கள்,  ஜனாயக ரீதியில்,  நிதானமாக சிந்தித்து முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

“கடந்த முன்று வருடங்களாக இல்லாத ஒருவர், திடீரென அமைச்சுப் பதவியைப் பெற்றுக்கொண்டு, பெயர்பலகைகளை மாற்றியுள்ளார். அவருக்கு பெயர்பலகைகளை மாத்திரம் மாற்ற முடியும். வேறு ஒன்றும் செய்யமுடியாது” என்றும் விமர்சித்தார்.

இதன்போது மேலும் கூறிய திகாம்பரம் எம்.பி, “இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளராக இருந்தவர், பகலில் ஒரு கட்சியிலிருந்துவிட்டு, இரவில் வேறு கட்சியில் அமைச்சராகினார். ஆனால் தமிழ் முற்போக்குக் கூட்டணி என்றுமே ஜனநாயகத்தை மதித்துச் செயற்படும்.

“நாங்கள் மக்கள் ஆணையை மீறி, அமைச்சுப் பதவியை ஏற்றிருந்தால், நுவரெலியா மாவட்ட மக்கள் முன்னிலையில் இன்று நாம் வந்திருக்க முடியாது. நாங்கள் சிந்தித்து செயலாற்றியமையினாலேயே, அனைவரும் இன்று எம்மை வரவேற்கின்றனர்.  2015ஆம் ஆண்டுக்கு பிறகு, நான் அமைச்சராக இருந்த காலப் பகுதியில் நான் வழங்கிய நியமனங்களை இரத்து செய்யுமாறு, தற்போது உள்ள புதிய அமைச்சர் கூறுகிறார். இவ்வாறான நடவடிக்கைகளைக் கண்டு, யாரும் பயப்பட வேண்டியத் தேவையில்லை. 15ஆம் திகதிக்குப் பிறகு, மீண்டும் நான் வருவேன்” என்றார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X