2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

‘ஒத்துழைப்பு வழங்குங்கள்’

Editorial   / 2018 ஜனவரி 23 , பி.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய வங்கி ஊழலுடன் தொடர்புப்பட்ட அனைவருக்கும் எதிராகச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி, அவர்களுக்குத் தண்டனை பெற்றுக்கொடுப்பதற்கு பிரதமர் உள்ளிட்ட சகலரும் கட்சி வேறுபாடின்றி ஆதரவு வழங்க வேண்டும்” என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.   

அதற்காகத் தம்மைப் பலப்படுத்த வேண்டுமேயன்றி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தம்மை பலவீனப்படுத்தும் வகையில் அவர்கள் செயற்படக்கூடாது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.  

கண்டியில், திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு கூறினார்.  இங்குத் தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறுகையில்,  

“கடந்த 2014ஆம் ஆண்டில் அப்போதிருந்த அரசாங்கத்திலிருந்து நான் வெளியேறியபோது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் என்மீது குற்றஞ்சாட்டியது போன்று, ஐக்கிய தேசியக் கட்சியினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

“நான் அவ்வாறு எந்தவொரு கட்சியினருக்கும் துரோகமிழைக்கவில்லை. ஊழல், மோசடி, வீண்விரயம், ஏகாதிபத்தியம் மற்றும் குடும்ப ஆட்சி என்பவற்றுக்கு எதிராகவே நான் எப்பொழுதும் செயற்படுகின்றேன்.  

“நாடு எதிர்நோக்கியிருந்த சர்வதேச சவால்களையும் அதிக கடன் சுமையால் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடியையும் எதிர்கொள்ள முடியாத தோல்வி நிலைமையே, மேலும் இரண்டு வருடங்கள் பதவி வகிக்கக்கூடிய சூழலிலும்கூட, முன்னாள் ஜனாதிபதி, அவசர அவசரமாகத் தேர்தலை நடத்தினார்.  

“2015 ஜனவரி 08ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாம் தடவையாக அவர் மீண்டும் என்னிடம் தோல்வியடைந்ததுடன் அதன் பின்னர் இடம்பெற்ற பொதுத்தேர்தலில், மூன்றாவதுத் தடவையாகவும் தோல்வியடைந்தார்.   

“இன்று மத்திய வங்கி அறிக்கை தொடர்பாக மேடைகளில் கூச்சலிடும் முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் நிதி அமைச்சருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்ட சந்தர்ப்பத்தில் அதில் கலந்துகொள்ளாது, நாடாளுமன்றத்திலிருந்து ரவி கருணாநாயக்க வெளியேறியதும் அலைபேசி அழைப்பை ஏற்படுத்தி அவருக்கு வாழ்த்துத் தெரிவித்ததையும் நான் நன்கு அறிவேன்.  

“மேலும் மத்திய வங்கி பிணைமுறி அறிக்கை தொடர்பாக எத்தகைய கருத்துகளை அவர் தெரிவித்தபோதிலும் இந்தப் பாரிய மோசடி 2008ஆம் ஆண்டு முதல் இடம்பெற்று வருவதாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளதை அவர் மறந்து விடக்கூடாது” எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X