2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஒரு வருடத்துக்கு மாத்திரம் ரூ. 50 ஊக்குவிப்புத் தொகை; நெருக்கடி ஏற்படுமென்கிறார் நவீன்

Editorial   / 2019 பெப்ரவரி 11 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ்   

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊக்குவிப்புத் தொகையாக வெறும் 50 ரூபாயை வழங்க, அரசாங்கம் முன்வந்துள்ளது. எனினும், இந்தத் தொகை, ஒரு வருடத்துக்கு மாத்திரமே வழங்கப்படும் என்பதால், அரசியல் ரீதியாகத் தாங்கள் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேரிடுமென, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க, அமைச்சர் பழனி திகாம்பரத்துக்கு அறிவுரை வழங்கியிருப்பதாக அறியமுடிகின்றது.  
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான ஊக்குவிப்புக் கொடுப்பனவாக, 140 ரூபாய் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ள தமிழ் முற்போக்குக் கூட்டணி, இல்லையெனில், அரசாங்கத்துக்கு வழங்கிவரும் ஆதரவை மீளப்பெறப் போவதாகவும் அறிவித்துள்ளது.  

இந்நிலையில், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊக்குவிப்புத் தொகை வழங்குவது குறித்து, தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கும் அரசாங்கத்துக்கும், பெருந்தோட்டக் கம்பனிகளுக்குமான முத்தரப்புப் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், கடந்த 7ஆம் திகதி நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்த நிலையில், தற்போது கையெழுத்திடப்பட்டுள்ள கூட்டு ஒப்பந்தத்தினூடாக, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊக்குவிப்புத் தொகையை வழங்க முடியாதென்றும் அவ்வாறு வழங்கும் பட்சத்தில், ஏற்கெனவே கையெழுத்திடப்பட்டுள்ள கூட்டு ஒப்பந்தம் செல்லுபடியற்றதாகி விடுமெனவும், அமைச்சர் திகாம்பரத்துக்கு, அரசாங்கத் தரப்பிலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.  

மேலும், கடந்த 07ஆம் திகதி நடைபெற்ற பேச்சுவார்த்தையினால், மேலதிகக் கொடுப்பனவாக 50 ரூபாயை, தற்காலிமாக ஒரு வருடத்துக்கு மாத்திரம் வழங்குவதற்கும், அரசாங்கத் தரப்பிலிருந்து பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது.  

இதன்படி, தொழிலாளர்களுக்கு இந்த 50 ரூபாய் ஊக்குவிப்புத் தொகையை வழங்கும் பட்சத்தில், வருடமொன்றுக்கு 1,200 மில்லியன் ​ரூபாய் தேவைப்படுமெனவும் அதற்காக, அரசாங்கத் தரப்பிலிருந்து 600 மில்லியன் ரூபாயும் கம்பனிகளிடமிருந்து 600 மில்லியன் ரூபாயும் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.  

இவ்வாறு 50 ரூபாய்க் கொடுப்பனவு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அதை, வெறும் ஒரு வருடத்துக்கு மாத்திரமே வழங்க முடியுமென்றும் அதன் பின்னர், இந்த கொடுப்பனவு நிறுத்தப்படுமெனவும், இதனால், ​தொழிலாளர் தேசிய சங்கமானது, தற்போதுள்ள பிரச்சினைகளைவிட, பாரியளவு ​அரசியல் நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேரிடுமென, அமைச்சர் நவீன் திசாநாயக்கவினால் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X