2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

’கணக்குப் பிள்ளை வேண்டாம்’

ஆ.ரமேஸ்   / 2018 மார்ச் 20 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

களனிவெளி பெருந்தோட்ட கம்பனி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலிபண்ட் தோட்டத்தின் கணக்குப் பிள்ளையை இடமாற்றக் கோரி, 178 தொழிலாளர்கள்,  தொடர்ந்தும் நான்காவது நாளாக பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்தத் தோட்டத்தின் மூன்று பிரிவுகளில், மேல் பிரிவு தோட்டத் தொழிலாளர்களே, கடந்த வௌ்ளிக்கிழமை (16) முதல், பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்து வருகின்றனர்.

தோட்டத்தின் மேல் பிரிவைச் சேர்ந்த தொழிலாளியின் இள வயது பிள்ளைகளைத் தாக்கினார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தே,  இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கணக்குப் பிள்ளை, குறித்த இளைஞர்கள் மீது, கடந்த வியாழக்கிழமை (15) தாக்குதல் மேற்கொண்டதாகவும் குறித்த மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, நேற்று  (19) சிகிச்சையை முடித்துக்கொண்டு வீடு திரும்பியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

கணக்குப் பிள்ளை சென்ற லொறிக்கு இடம்விடாது, முச்சக்கரவண்டியொன்றை, வீதியில் அம்மூவரும் நிறுத்தியிருந்ததாகவும் இதன்போது ஏற்பட்ட வாக்குவாதம், கைகலப்பாக மாறியதாகவும் கூறப்படுகின்றது.

எனினும், இந்தச் சம்பவம், தோட்ட நிர்வாகத்தின்  தொழில் நடவடிக்கையின் போது இடம்பெற்ற சம்பவம் இல்லை என்பதால்,  இதற்கு, தோட்ட அதிகாரி பொறுப்புகூற முடியாது என்றும் இது தனிப்பட்ட பிரச்சினை என்றும் தோட்ட நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு பொலிஸாரே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, தோட்ட நிர்வாகியும், கணக்குப் பிள்ளைக்குச் சார்பாகவே செயற்பட்டு வருவதாக, தொழிலாளர்கள் குற்றச்சாட்டியுள்ளனர். இந்நிலையில், கணக்குப் பிள்ளையை, தோட்டத்தை விட்டு அனுப்பும் வரைக்கும் தாம் முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பை கைவிடப்போவதில்லை என்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவோர் கூறியுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X