2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கபரகல வித்தியாலயத்தில் அடிப்படை வசதிகளில்லை

Editorial   / 2018 ஜூன் 15 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா மாவட்டம், ஹங்குராங்கெத்த கல்வி வலயத்துக்குட்பட்ட கபரகல தமிழ் வித்தியாலயம், எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி இயங்கி வருகிறது என, பெற்றோரும் மாணவர்களும் தெரிவிக்கின்றனர்.  

ஆரம்பத்தில், தரம் 8 வரையான வகுப்புகளுடன் மட்டும் இயங்கிவந்த இந்தப் பாடசாலையில், தற்போது, கல்விப்பொதுத் தராதர சாதாரண தரம் வரையில் வகுப்புகள் காணப்படுகின்றன. எனினும் இந்தப் பாடசாலை, பல்வேறு அடிப்படை வசதிகளின்றியே நீண்டகாலமாக இயங்கிவருகிறது என, பாடசாலையின் ஆசிரியர்களும் பழைய மாணவர்களும் குற்றஞ்சாட்டுகின்றனர்.  

200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்விபயிலும் இந்தப் பாடசாலையில், போதிய இடவசதிகள் இல்லை என்றும், 1930களில் கட்டப்பட்ட பழைய கட்டடமொன்றும், புதிதாகக் கட்டப்பட்ட ஒரு கட்டடமுமே, மாணவர்களின் பயன்பாட்டுக்காகக் காணப்படுகின்றன என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.  

தரம் 6 முதல், சாதாரண தரம் வரையான வகுப்புகள் அனைத்தும், ஒரே கட்டடத்திலேயே இயங்குகின்றன என்பதோடு, ஆரம்ப வகுப்புகளும் பாடசாலையின் அலுவலகமும், மற்றைய கட்டடத்தில் இயங்கி வருகின்றன என, பாடசாலைச் சமூகம் தெரிவிக்கின்றது.  

1930களில் கட்டப்பட்டுள்ள பழைய கட்டடத்தின் கூரை, மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதாகவும் அதிக காற்றுடன் கூடிய வானிலை காலத்தில், பாடசாலையின் கூரைகள் காற்றில் அள்ளுண்டு செல்லப்படுகின்றன எனவும் தெரிவிக்கப்படுகிறது.  

இவ்வாறான சந்தர்ப்பங்களில் கற்களை வைத்தே, கூரைகளைச் சரிசெய்வதாகவும், ஆனால், கடந்த வாரம் வீசிய கடுங் காற்றுக் காரணமாக, கற்களையும் வீழ்த்திக்கொண்டு கூரைகள் காற்றில் பறந்து சென்றன எனவும், ஆசிரியர்கள் தெரிவித்தனர்.  

பாடசாலையில் குறைபாடுகள் தொடர்பில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள போதிலும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று, மாணவர்களின் பெற்றோரும் பழைய மாணவர்களும் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .