2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’கம்பனிகளின் அறிவிப்பை ஏற்க முடியாது’ போராட்ட வடிவம் மாறும் என அறிவிப்பு

Editorial   / 2018 ஒக்டோபர் 26 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ்

தொழிலாளர்களின் சம்பள விடயத்தில், கம்பனிகளின் இறுதி முடிவை ஏற்க முடியாது என, திட்டவட்டமாக அறிவித்துள்ள தொழிற்சங்கங்கள், தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் 1,000 ரூபாயாக உயர்த்தப்படாவிட்டால், போராட்ட வடிவம் மாறும் என்றும் எச்சரித்துள்ளன.

கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் தொழிற்சங்களின் ஊடகவியலாளர் சந்திப்பு, சமூக நலன்புரி மற்றும் ஆரம்பக் கைத்தொழில் பிரதியமைச்சில், நேற்று (25) நடைபெற்றது.

இந்தச் சந்திப்பில், பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான், இலங்கை தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சு​ரேஷ், கூட்டுக் கமிட்டியின் தலைவர் எஸ்.இராமநாதன் ஆகியோர் கலந்துகொண்டு, கூட்டாக இதனைத் தெரிவித்தனர்.

பெருந்தோட்டக் கம்பனிகளின் முடிவை தாம் நிராகரிப்பதாகவும், முதலாளிமார் சம்மேளனத்துடன் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் தொழிற்சங்கங்கள் இணைந்து மேற்கொள்ளும் தீர்மானமே இறுதியானது என்றும் தெரிவித்த ஆறுமுகன் எம்.பி, ஒரு தரப்பின் முடிவை, இறுதித் தீர்வாக கருத முடியாது என்றும் தெரிவித்தார்.

2016ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம், கடந்த 15 ஆம் திகதியோடு முடிவடைந்திருந்தாலும், கூட்டு ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் முடிவடையும் வரையில், பழைய கூட்டு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட சம்பளத் தொகை வழங்கப்பட்டு வரும் என்றும், இடைப்பட்டக் காலத்துக்கான நிலுவைத் தொகையையும் பெற்றுக்கொடுப்பதாகவும், அவர் மேலும் உறுதியளித்தார்.

இதன்போது கடந்த முறை 19 மாதகால இழுத்தடிப்புச் செய்யப்பட்டும் கூட, நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை என கேள்வி எழுப்பப்பட்டதற்குப் பதிலளித்த தொண்டமான் எம்.பி, கடந்த காலத்தில் இடைக்காலக் கொடுப்பனவு வழங்கியதாலும் அரசாங்கத்தின் தலையீடுகளாலும், தம்மால் நிலுவைத் தொகையைப் பெற்றுத் தரமுடியாது போனது என்றார்.

ஆனால் இம்முறை கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிப்பதற்கு முன்பே, நிலுவைத் தொகை வழங்கப்பட வேண்டும் என்ற கடிதம் ஒன்றை, முதலாளிமார் சம்மேளனத்துக்கு வழங்கியதாகத் தெரிவித்தார்.

ஊடகவியலாளர் சந்திப்புகளில், நிலுவைத் தொகை வழங்க முடியாமைக்குக் காரணம், அரசாங்கம் என்று கூறும் தொண்டமான் எம்.பி, கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் மக்கள் தொழிலளார் சங்கம் தொடர்ந்திருந்த வழக்கு ஒன்றில், கூட்டு ஒப்பந்தம் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படல் வேண்டும் என்றோ, நிலுவை சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்ற ஏற்பாடுகளோ அல்லது தேவைப்பாடுகளோ இல்லை என்று கூறியிருக்கிறாரே என்று, இதன்போது அவரிடம் வினவப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அவர், "அந்த வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது. 2016 ஷஆம் ஆண்டுக்கு முன்னர் செய்துகொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தின்போது, 6 மாதம் நிலுவைத் தொகை வழங்கப்பட்டதே நினைவிருக்கிறதா?" என்று, பதில் கேள்வியெழுப்பினார்.

முதலாளிமார் சம்மேளனத்தால், 1,000 ரூபாய் என்பது வழங்கப்பட முடியாத தொகை என்றும், அதை அறிந்துகொண்டே, தொழிலாளர்களைத் தொழிற்சங்கங்கள் தவறாக வழிநடத்துகின்றன என்ற விமர்சனம் தொடர்பாகக் கேட்கப்பட்டபோது, "இதோ பாருங்கள், ஆயிரம் ரூபாய் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். மக்களின் வாழ்க்கைச் செலவுகளோடு பார்க்கும்போது, இது நியாயமான தொகை. அவர்கள் 600 ரூபாய்தான் தரமுடியும் என்று சொல்கிறார்கள். இதில் யார் வெற்றிப் பெறப்போகிறார்கள் என்று பார்ப்போம்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அதேபோல், கூட்டு ஒப்பந்தத்தில் சரத்துகள் எவையும் மாற்றப்பட வேண்டும் என்றால், அவற்றை மாற்றுவதற்குத் தயாராக இருப்பதாகத் தெரிவித்த அவர், தன் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் பதிலளிக்கும் போது, "சிலர், வெறும் பேச்சுகளில் மாத்தி​ரமே செயற்படுவார்கள். சிலர், செயல்களில் காட்டுவார்கள். நான், செயலில் காட்டுபவன்" என்று தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .