2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

கரும்பு உற்பத்தியாளர்கள் பாதிப்பு; 30 ஆயிரம் குடும்பங்கள் நிர்க்கதி

Editorial   / 2017 நவம்பர் 16 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிர்ஷன் இராமானுஜம்   

மொனராகலை மாவட்டத்தின் செவனகல, பெல்வத்த, ஹிங்குரான ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கரும்பு உற்பத்தியில் ஈடுபடும் 30 ஆயிரம் குடும்பங்கள், குறைந்த வருமானம் காரணமாக நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இவர்கள், கடந்த 25 நாட்களாக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காதது ஏன்?” என, நாடாளுமன்ற உறுப்பினரும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருமான அநுர குமார திசாநாயக்க, நாடாளுமன்றில் நேற்று (15) கேள்வி எழுப்பினார்.   

நாடாளுமன்றம், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்றுக் காலை 9.30 மணிக்கு கூடியது. சபை ஆரம்ப நடவடிக்கைகளின் பின்னர், 23/2 நிலையியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் அநுர குமார திசாநாயக்க இந்தக்

கேள்வியை முன்வைத்தார். அவர் அங்கு மேலும் கூறியதாவது,   

“எமது நாட்டின் நுகர்வுக்காக, 9 சதவீத சீனி மாத்திரமே உற்பத்தி செய்யப்படுகிறது. அந்த உற்பத்திகளில் மேற்படி பகுதிகளைச் சேர்ந்த கரும்பு உற்பத்தியாளர்கள் பெரும் பங்கு வகிக்கிறார்கள். எனினும், அவர்கள் வருமானத்தில் மிகவும் பின்தங்கியவர்களாகவே காணப்படுகின்றனர். குத்தகைக்கு நிலத்தைப் பெற்று, வருமானம் கிடைக்கும் போது குத்தகையை செலுத்துவதற்கே வருமானம் போதுமானதாக உள்ளமையே இதற்கு காரணம்.   

“சீனி உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், பெரும் பணத்தைக் கொண்டிருக்கின்றன. ஆனால், சாதாரண விவசாயிகளின் விடயத்தில் அவை கரிசனை கொள்வதாகத் தெரியவில்லை.

“அந்த விவசாயிகள், 10 கோரிக்கைகளை முன்வைத்து சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவை மிகச் சாதாரணமான, விவசாய மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடிய கோரிக்கைகள் ஆகும். விவசாயிகளின் இந்தப் பிரச்சினைக்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.   
இதற்குப் பதிலளித்த நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர், அந்த மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தொழிற்சாலைகளில் நிலவும் தொழில்நுட்பப் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.   
இதன்போது கேள்வி எழுப்பிய அநுர குமார திசாநாயக்க, “தொழிற்சாலைகளைப் புனரமைப்புச் செய்து, அமைச்சர் தயா கமகேக்கு கொடுப்பதற்கா தயாராகிறீர்கள்?” எனக் கேள்வி எழுப்பினார். இதற்கு, “இல்லை” என அமைச்சர் பதிலளித்தார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X