2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘களவானிகள் இருவரும் ஏமாற்றிவிட்டனர்’

ஆ.ரமேஸ்   / 2019 பெப்ரவரி 18 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆயிரம் ரூபாயைப் பெற்றுத்தருவதாகக் கூறி, மக்களிடம் வாக்குறுதிய வழங்கிய இரண்டு களவானிகளும் இம்முறையும் மக்களை ஏமாற்றிவிட்டனர் என்று சாடியுள்ள மலையகப் புதிய கிராமங்கள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், இரண்டு தொழிற்சங்கங்களால், வெறும் 20 ரூபாய் சம்பள அதிகரிப்பே பெற்றுக்கொடுக்கப்பட்டதாகவும் விமர்சித்தார். 

எனினும், மக்கள் வழங்கிய அரசியல் பலத்தால், வரலாற்றில் முதற் தடவையாக, வரவு-செலவுத் திட்டத்தின் மூலம், நாளொன்றுக்கு 50 ரூபாயை உயர்த்தி, தமிழ் முற்போக்குக் கூட்டணி வரலாற்று சாதனை படைத்துள்ளதென்றும் தெரிவித்தார். பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, இம்முறை பாதீட்டினூடாக வழங்கப்படவுள்ள ஐம்பது ரூபாய் சம்பள அதிகரிப்புத் தொடர்பில் விளக்கமளிக்கும் கூட்டம், ஹட்டன் டி.கே.டபிள்யு மண்டபத்தில், நேற்று (17) நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே, அவர் இவ்வாறுத் தெரிவித்தார்.  

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளில் பேசுவதைத் தவிர்க்க வேண்டுமென்று நினைத்தாலும் தன்னால் அதனைத் தவிர்த்துக்கொள்ள முடிவதில்லை என்றுத் தெரிவித்ததுடன், தொழிலாளர்களுக்கு வழங்கப்படவுள்ள நிலுவைப் பணத்தை, த.மு.கூட்டணி நிறுத்திவிட்டது என்று கூறித்திரிபவர்களுக்கு, எவ்வாறு பதிலளிப்பது என்றும் கேள்வி எழுப்பினார்.  

மேலும் பிரதமர் காரியாலயத்தில், கூட்டுஒப்பந்தம் கைச்சாத்திட்டதால், ஐக்கிய தேசியக் கட்சி தம்மை ஏமாற்றிவிட்டதாக மக்கள் குறைக்கூறுவதை ஏற்க முடியாது என்றும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் அழுத்தத்தால், நாள் ஒன்றுக்கு 50 ரூபாயைப் பாதீட்டினூடாக வழங்குவதற்கு, அரசாங்கம் முன்வந்துள்ளதெனவும் தெரிவித்தார். 

அத்துடன் எதிர்காலத்தில், தோட்டத் தொழிலாளர்களின் எதிர்கால நன்மைக்காக, பெருந்தோட்டங்களைப் பிரித்து் கொடுப்பதற்கு, அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

இதேவேளையில் அரசியல் ரீதியாக பலம் தந்த மக்கள், தொழிற்சங்க ரீதியாகப் பலத்தை வழங்கினால், கம்பனிகளுடன் பேரம் பேசி, சம்பள உயர்வைப் பெற்றுத் தருவதாகவும் நம்பிக்கைத் தெரிவித்தார். 

மேலும், பொகவந்தலாவையில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்திய வீடமைப்புத் திட்டம், மக்களின் பாவனைக்காக எதிர்வரும் 24ஆம் திகதி கையளிக்கப்படவுள்ளதென்றும் இந்நிகழ்வில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டு, வீடுகளை மக்களிடம் கையளிக்கவுள்ளார் என்றும் இந்நிகழ்வில், அனைவரும் பங்கேற்று, சம்பள உயர்வுக்கு காரணமான பிரதமருக்கு நன்றித் தெரிவிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .