2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

களைகட்டிய ஹட்டன் நகையகம்

Editorial   / 2018 ஏப்ரல் 18 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமச்சந்திரன்

அட்சய திருதியையான இன்று (18), ஹட்டன் நகரின் நகையகங்கள் கலைக்கட்டியுள்ளன. மலையக வாழ் இந்து மக்கள், அக்சய திருதியை தினத்தை முன்னிட்டு தங்க நகை ஆபரண கொள்வனவில் ஈடுபட்டுள்ளனர்.

அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு, வாழை மரதோரணையில், நகையகங்கள் அலங்கரிக்கப்பட்டு, தங்கம் கொள்வனவு செய்வோருக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

அட்சய திருதியை தினமானது, இந்து மற்றும் சமணர்களின் புனித நாள் ஆகும். அது தமிழ் மாதமான சித்திரை வளர்பிறையில், அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவதாகும். முதல் யுகமான கிருதயுகத்தில் பிரம்மனால் உலகம் தோற்றுவித்த நாள் அட்சய திருதியை என கூறப்படுகின்றது.

மேலும் இந்து புராணங்களில் குறிப்பிடப்படும் முனிவரான பரசுராமரின்  பிறந்த தினம் என்றும் கூறப்படுகின்றது. அவர் திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறார்.

இந்து இதிகாசங்களின்படி, அட்சய திருதியை நாளில் திரேதா யுகம் தொடங்கியது, மேலும் பகீரதன் தவம் செய்து இந்தியாவின் மிகப் புனிதமான, புண்ணிய நதியான கங்கை நதி சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வரவழைத்தது இந்நாளில்தான் எனக் கூறப்படுகிறது. அதுபோல், சமணர்களை பொறுத்தவரை, ரிசபதேவரின் நினைவாகவும் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.

"அட்சயா" எனும் சொல், சமஸ்கிருதத்தில் எப்போதும் குறையாதது எனும் பொருளில் வழங்கப்படுகிறது. மேலும் இந்த நாள் நல்ல பலன்களையும் வெற்றியையும் தரும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக மங்களகரமான நீண்டகால சொத்துக்களான தங்கம், வெள்ளி, அவற்றினால் செய்யப்பட்ட நகைகள், வைரம் மற்றும் இதர விலைமதிப்பற்ற கற்கள் மற்றும் வீடு-மனைகள் போன்றவற்றை வாங்க உகந்த  நாளாகவும் கருதப்படுகிறது.

மேலும், அட்சய திருதியை நாளில் தொடங்கப்பட்ட எந்தவொரு முயற்சியும், தொடர்ச்சியாக வளர்ந்து நன்மையைக் கொடுக்கும் எனக் கூறுகின்றனர். ஆகையால் ஒரு வணிகத்தினைத் துவங்குவது, கட்டடம் கட்ட, பூமி பூசையிடுவது போன்ற புதிய முயற்சிகளை அட்சய திருதியை நாளில் செய்ய பலர் விரும்புகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .