2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கிராம சக்தி திட்டம் ’வறியவர்களை மீட்டெடுக்கும்’

Editorial   / 2018 ஜூலை 25 , பி.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணிஸ்ரீ

இரத்தினபுரி மாவட்டத்தின் 8.6 சதவதமான குடும்பங்களும் கேகாலை மாவட்டத்தில் 7.2 சதவீதமான குடும்பங்களும், வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்வதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இவ்வாறு வறுமை கோட்டுக்குக் கீழ் வாழ்பவர்களை மீட்டெடுப்பதற்காகவே, கிராம மட்டத்தில், “கிராமசக்தி” வேலைத்திட்டதை நடைமுறைப்படுத்தி வருவதாகத் தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தின் முக்கியத் திட்டமாக, நாடு முழுவதும் செயற்படுத்தப்படும் கிராம சக்தி மக்கள் திட்டம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், சப்ரகமுவா மாகாணத்தில், இன்று (25) அறிமுகம் செய்துவைக்கப்பட்டது.

சப்ரகமுவா மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே, அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு தொடர்ந்துரைத்த ஜனாதிபதி, நாட்டின் வறுமையை ஒழிப்பதற்காக, இதுவரை மேற்கொள்ளப்பட்ட திட்டங்களிலிருந்து, இத்திட்டம் மாறுபட்டதென்றும் சுய முயற்சியால் முன்னேறுபவர்களை ஊக்குவிக்கும் திட்டமாக, இந்தத் திட்டம் அமைந்துள்ளதென்றும் தெரிவித்தார்.

மேற்படி வேலைத்திட்டத்துக்கான முதலாவது கொடுப்பனவு, இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு வழங்கி வைக்கப்படுவதாகவும் இந்நிதியைக் கொண்டு, வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட மக்களை முன்னேற்றும் வகையில், அதிகாரிகள் செயற்பட வேண்டுமென்றும், ஜனாதிபதி தெரிவித்தார்.

கிராமசக்தி திட்டத்தின் மூலம், இரத்தினபுரி மாவட்டத்தில் வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட கிராமங்களை அபிவிருத்திச் செய்வதற்கு, 510 மில்லியன் ரூபாயும் கேகாலை மாவட்டத்துக்கு 330 மில்லியன் ரூபாயும் ஜனாதிபதியினால், இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டச் செயலாளர்களிடம் கையளிக்கப்பட்டன.

அத்தோடு, கித்துல் கருப்பட்டி மற்றும் பலாக்காய் உற்பத்தி என்பன, கார்கில்ஸ் மற்றும் சதாஹரித்த நிறுவனங்களுக்குக் கொள்வனவு செய்வதாக, இரத்தினபுரி மாவட்டத்தின் குடாவ, கெஹெல்லோவிட்டிகம ஆகிய கிராமிய அபிவிருத்தி தொடர்பான மக்கள் அமைப்பு, மேற்படி நிறுவனங்களுடன் ஜனாதிபதி முன்னிலையில் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .