2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘கூட்டு ஒப்பந்தத்தில் தேயிலைத் தூளுக்கான சரத்து வேண்டும்’

Editorial   / 2018 ஏப்ரல் 19 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். செல்வராஜா

கூட்டு ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும் போது, தோட்டத் தொழிலாளர்களுக்கு உயர் ரகத் தேயிலைத்தூளை இலவசமாக வழங்க வேண்டுமென்பதை உறுதிப்படுத்த வேண்டுமென்று வலியுறுத்திய பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார், அதற்கான சரத்தை, கூட்டு ஒப்பந்தத்தில் உள்ளடக்க வேண்டியது அவசியமென்றும் குறிப்பிட்டார்.

அரவிந்தகுமார் எம்.பியின் பதுளைப் பணியகத்தில், இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், தோட்டத் தொழிலாளர்கள் உற்பத்தி செய்யும் தரமிக்க தேயிலைத் தூளை, யார் யாரோ சுவைக்கின்ற போதிலும், தேயிலைத்தூளை உற்பத்தி செய்யும் தொழிலாளர்களுக்கோ, அதைச் சுவைக்க முடிவதில்லையெனக் கூறினார்.

அவர்களுக்குக் கிடைக்கும் தேயிலைத்தூள், தேயிலைக் கழிவான தூசியெனக் குற்றஞ்சாட்டிய அவர், இதனை 'லேபர் டஸ்ட்' என்ற பெயரில், தோட்டத் தொழிலாளர்களுக்கு விநியோகிக்கப்படுதாகக் குறிப்பிட்டதுடன், தேயிலைத்தூள் தூசியில் தயாரிக்கப்படும் தேநீரையே, தோட்டத் தொழிலாளர்கள் அருந்தி வருகின்றனரெனவும் அதிருப்தி வௌியிட்டார்.

ஆகையால், கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தோட்டத் தொழிற்சங்க முக்கியஸ்தர்கள், தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் 'லேபர் டஸ்ட்' என்ற தேயிலைத்தூள் தூசியின் மூலம் தயாரிக்கப்படும் தேநீரை, கூட்டுஒப்பந்த மேசையில் வைத்தே அருந்த வேண்டுமெனத் தெரிவித்த அவர், அப்போதுதான் தோட்டத் தொழிலாளர்கள் அருந்தி வரும் தேநீரைப் பற்றி அறிய முடியுமெனவும் இதன் மூலமே, தோட்டத் தொழிலாளர்களுக்கு இதுவரை காலமும் மேற்கொள்ளப்பட்ட அநீதி புலனாகுமெனவும் தெரிவித்தார்.

மேலும், இத்தேயிலைத்தூள் தூசியை, தொழிலாளர்களுக்கு வழங்குவதற்கு, தோட்ட நிர்வாகங்கள் பல்வேறு நிபந்தனைகளையும் கெடுபிடிகளையும் ஏற்படுத்தி வருகின்றனவெனக் குற்றஞ்சாட்டிய அவர், வழங்கப்படும் இத்தேயிலைத் தூள் தூசியைக்கூட, 500 கிராமுக்கு 1 ரூபாய் 35 சதம் என்ற வகையில் தொழிலாளர்களிடமிருந்து அறவிடுகின்றனவெனச் சுட்டிக்காட்டியதுடன், இத்தேயிலைத் தூள் தூசியைக்கூட, தொழிலாளர்களுக்கு இலவசமாக வழங்க, தோட்ட நிர்வாகங்கள் முன்வருவதில்லையெனவும் அதிருப்தி ​வௌியிட்டார்.

எனவே, இவ்வாறான செயற்பாடுகளைத் தவிர்த்து, அடுத்து வரும் மாதத்தில் புதுப்பிக்கப்படும் கூட்டு ஒப்பந்தத்தின் மூலம், தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிசிறந்த ரகத் தேயிலையை இலவசமாக வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யவேண்டுமெனவும், அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .