2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கூட்டு ஒப்பந்தத்துக்கு எதிராக ‘சர்வதேசத்தை நாடத் திட்டம்’

Editorial   / 2018 ஜூன் 27 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ்   

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் நலன் சார்பில் செய்துகொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் குறித்து, சர்வதேச தொழில் ஸ்தாபனம் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியவற்றில் முறைப்பாடுசெய்ய உத்தேசித்துள்ளதாக, மக்கள் தொழிலாளர் சங்கத்தின் தலைவரும் சட்டத்தரணியுமான இ.தம்பையா தெரிவித்தார்.   
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சார்பில், கடந்த 2016ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தில், தொழிலாளர்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டிய அவர் எனவே, குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், இலங்கைத் தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் பெருந்தோட்டத் தொழிற்சங்கக் கூட்டமைப்பு என்பவை, அதிலிருந்து விலக வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.  

மக்கள் தொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டிலான ஊடகவியலாளர் சந்திப்பொன்று, கொழும்பில் நேற்று (26) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே, அவர் இவ்வாறு கூறினார்.   

அங்கு தொடர்ந்துரைத்த அவர், 2016ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதியோடு முடிவடைகின்ற நிலையில், அடுத்த சம்பளக் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடும் வரையான நிலுவைத்தொகை உள்ளிட்ட தொழிலாளர் நலன் சார்ந்த விடயங்களைப் பெற்றுக்கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இது, தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் பாரிய அநீதியாகுமென்றும் சாடினார்.   

மேலும், 2003ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட அடிப்படைக் கூட்டு ஒப்பந்தத்திலும், உரிய திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், அவர் வலியுறுத்தினார்.  

2016ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தில், ஒப்பந்தக் காலத்தை முடிவடையச் செய்யாது, தொடர்ந்து நீடிப்பதற்கான ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன என்றும், அவர் சுட்டிக்காட்டினார்.  

2016ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட சம்பளக் கூட்டு ஒப்பந்தத்தில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம், இலங்கைத் தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் உள்ளிட்டோர் கையெழுத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .