2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கூட்டு ஒப்பந்தத்துக்கு எதிரான தம்பையாவின் மனு தள்ளுபடி

Editorial   / 2019 ஜனவரி 18 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில், முதலாளிமார் சம்மேளனத்துக்கும் தொழிற்​சங்கங்களுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தை சவாலுக்குட்படுத்தி, தாக்கல் செய்யப்பட்டிருந்த விசேட மேன்முறையீட்டு மனுவை, உயர்நீதிமன்றம் நேற்று (17) தள்ளுபடி செய்தது.

கூட்டு ஒப்பந்தமொன்று செய்யப்பட்டிருக்கும் போது, அதனை நீதிமன்றத்தினூடாக சவாலுக்கு உட்படுத்த முடியாதென அறிவுறுத்தியுள்ள உயர்நீதிமன்றம், ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் அல்லது முதலாளிமார் சம்மேளனம், தொழில் ஆணையாளருக்கு அறிவுறுத்துவதன் ஊடாகவே, ஒப்பந்தத்தை நிறைவுக்கு கொண்டுவரலாம் என்றும் அறிவித்துள்ளது.

மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இ. தம்பையாவினால் தாக்கல்​ செய்யப்பட்டிருந்த இந்த விசேட மேன்முறையீட்டு மனு, உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரியந்த ஜயவர்தன, விஜித மல்லகொட மற்றும் முருது பெர்ணான்டோ ஆகியோர் முன்னிலையில் நேற்று (17) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.

கூட்டு ஒப்பந்தமொன்று செய்யப்பட்டிருக்கும் ஒப்பந்தத்தின் தரப்புகளான தொழில் வழங்குனருக்கோ, கம்பனிகளுக்கோ, தொழிலாளர்கள் சார்பாக கையொப்பமிடும் தொழிற்சங்கங்களுக்கோ, நேரடியாக தொழிலாளர்களுக்கோ, நீதிமன்றத்தினூடாக கூட்டு ஒப்பந்தத்தை முடிவுறுத்தவோ, கேள்விக்கு உட்படுத்தவோ முடியாது என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது,

2016ஆம் ஆண்டு செய்துக்கொள்ளப்பட்ட பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளவுயர்வு கூட்டு ஒப்பந்தம், தொழிற்சட்டங்களுக்கு முரணானது என்பதாலும், அடிப்படை கூட்டு ஒப்பந்தத்துக்கு எதிரானதும் என்பதாலும் அதனை இரத்துச் செய்யுமாறும் விசேட மேன்முறையீட்டு மனுவில் கோரியிருந்தார்.

அத்துடன், அதற்கான கட்டளையை, பெருந்தோட்டக் கம்பனிகள் சார்பாக ஒப்பமிடும் இலங்கை முதலாளிமார் சம்மேளனத்துக்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் தொழிற்சங்க கூட்டு கமிட்டி ஆகிய தொழிற்சங்கங்களுக்கும் தொழில் ஆணையாளர் ஊடாக கட்டளையிடுமாறும் கோரியிருந்தார்.

இந்நிலையில் ரிட் மனுமீதான விசாரணையின் போது, கூட்டு ஒப்பந்தத்தை மேலே குறிப்பிட்ட இருதரப்பை தவிர வேறெவருக்கும் சவாலுக்கு உட்படுத்த முடியாதென்றும், வழக்கிடுவதற்கான தகைமை மனுதாரருக்கு இல்லையென்றும், பிரதிவாதிகள் தரப்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணிகளின் முதற்கட்ட ஆட்சேபனையை ஏற்று, தள்ளுபடி செய்திருந்தது.

அதனை ஆட்சேபித்து, சட்டத்தரணி இ.தம்பையா, விசேட மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவே, நேற்று (17) தள்ளுபடி செய்யப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .