2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கூட்டொப்பந்த விவகாரம்: அரசியல் கைதிகளும் குரல்

Editorial   / 2018 ஒக்டோபர் 08 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ்

 

இம்முறை கைச்சாத்திடப்படவுள்ள கூட்டொப்பந்தத்தில், பெருந்தோட்டத்துறைத் தொழிலாளர்களுக்கு, நியாயமான சம்பளம் அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ள அரசியல் கைதிகள், மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களும், அ​ரசியல் கைதிகளின் விடுதலைக்காகக் குரல் கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

​அரசியல் கைதிகள் விடுதலையை ​வலியுறுத்தி, அநுராதபுர சிறைச்சாலையிலும் புதிய மகசின் சிறைச்சாலையிலும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கைதிகளே, இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.  

புதிய மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல்​ கைதிகளை, தமிழ் மிரர் பத்திரிகையின் ஊடகவியலாளர், அண்மையில் பார்வையிட சென்றிருந்தபோதே, அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தனர்.  

இதன்போது அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், வடக்கிலுள்ளவர்கள் மாத்திரம் அரசியல் கைதிகளாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என நிலவிவரும் பொதுவான கருத்துகள் தவறானவை எனத் தெரிவித்த அவர்கள், மலையகத்திலுள்ள பலரும், அரசியல் கைதிகளாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.  

அரசியல் கைதிகளின் விடுதலையில், வடக்கு, கிழக்கு உள்ளிட்ட மலையக அரசியல்வாதிகளின் கூட்டுப் பொறுப்பு காணப்படுவதாகவும் ஆகவே, தங்களது விடுதலைக்காக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.  

இதேவேளை, தற்போதுள்ள கூட்டொப்பந்தம், எதிர்வரும் 14ஆம் திகதியோடு முடிவடையவுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர்கள், மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, இம்முறையாவது நியாயமான சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.  

கூட்டொப்பந்தப் போராட்ட வரலாற்றில், மலையக தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் தவிர்த்து, வடக்கு, கிழக்கு, கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. வெளிநாடுகளில் வாழும் தமிழர்களும் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டிருக்கின்ற நிலையில், அரசியல் கைதிகளும், கூட்டொப்பந்தத்தில் நியாயமான சம்பள உயர்வுப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளமை, இதுவே முதற்தடவை என்பது குறிப்பிடத்தக்கது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X