2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கைக்காசுக்குப் பணிப்புரிவோரின் சம்பளம் கொள்ளையடிப்பு

Editorial   / 2019 மார்ச் 29 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ்

 

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, மடுல்சீமை பெருந்தோட்டக் கம்பனியால் நிர்வகிக்கப்படும் லெட்சுமித் தோட்ட நிர்வாகம், தமது சம்பளப் பணத்​தைக் கொள்ளையடிப்பதாக, கைக்காசுக்கு (தற்காலிகம்) பணிபுரியும் தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

பெருந்தோட்டக் கம்பனிகள், கைகாசுக்கு தொழில்புரியும் தொழிலார்களுக்கு, தேயிலை கிலோ ஒன்றுக்கு 40 ரூபாயைச் சம்பளமாக வழங்கி வருகின்ற நிலையில், லெட்சுமித் தோட்ட நிர்வாகம் வெறும் 20 ரூபாயை மட்டுமே வழங்கி வருவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கடந்த மாதத்தில் 500 கிலோ கொழுந்து பறித்துள்ளதாகத் தெரிவிக்கும் ​தொழிலாளி ஒருவர், தனக்கு 20 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டிருக்க வேண்டுமெனவும், எனினும், வெறும் 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே சம்பளமாக  வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

லெட்சுமித் தோட்டத்தில், மத்தியப் பிரிவு, கீழ் பிரிவு, மேல் பிரிவு என 5 பிரிவுகள் உள்ளன என்றும் மத்திய பிரிவில் மாத்திரம் 15 பேர் கைகாசுக்கு தொழில்புரிகின்றனர் என்றும் இதன்படி 5 பிரிவுகளிலும் சுமார் நூறு பேர் வரையில் தொழில்புரிகின்றனர் என்றும் தெரிவித்தார்.

சுமார் 100 தொழிலாளர்களின் சம்பளத்தில், அரைவாசியை தோட்ட நிர்வாகம் கொள்ளையடிப்பதாகக் குற்றஞ்சுமத்திய அவர், இதனால் தோட்ட நிர்வாகம் இலட்சக்கணக்கான ரூபாய்களை கொள்ளையடிப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.

இது தொடர்பில், குறித்த தோட்ட நிர்வாகத்தின் முகாமையாளர் அத்துல விஜேவர்தனவிடம் தமிழ்மிரர் வினவியபோது, இது தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதாகக் கூறி​, கேள்விகளுக்கு பதில் வழங்கவும் மறுத்துவிட்டார்.

இதேவேளை, இப்பிரச்சினை தொடர்பில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உடனடியாக நடவடிக்கை எடுக்குமென அக்கட்சியின் உபதலைவரும் முன்னாள் மாகாணசபையின் உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .