2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை

Editorial   / 2018 ஓகஸ்ட் 13 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் மாவட்ட உத்தியோகத்தர்களுக்கான சந்திப்பைப் புறக்கணித்த, சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு எதிராக, நடவடிக்கை எடுக்குமாறு, அமைச்சர் நவீன் திசாநாயக்க, சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் மாவட்ட உத்தியோகத்தர்களுக்கான சந்திப்பு, நுவரெலியா மாநகரசபை மண்டபத்தில், வெள்ளிக்கிழமை (10) நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு, நுவரெலியா மாவட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும் இந்நிகழ்வில், நூற்றுக்கும் குறைவான உத்தியோகத்தர்களே அன்றைய தினம் பங்கேற்றிருந்தனர்.

இந்நிகழ்வின், அதிதிகளாக அமைச்சர்களான நவீன் திசாநாயக்க, பி.ஹரிசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்துரைத்த அமைச்சர் நவீன் திசாநாயக்க, நுவரெலியா மாவட்டத்தில் 900க்கும் மேற்பட்ட சமுர்த்தி உத்தியோகத்தகர்கள் உள்ளனர் எனச் சுட்டிக்காட்டியதுடன், மேற்படி உறுப்பினர்களை இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அழைப்புவிடுத்த போதிலும் 100க்கும் குறைவானவர்களே, கலந்துகொண்டுள்ளனர் எனவும் சாடினார்.

மேலும் அவர், “அரசாங்கத் திணைக்களம் ஒன்றுக்குப் பொறுப்பான அமைச்சர் ஒருவர் வருகை தந்துள்ள நிகழ்வைப் புறக்கணிக்கும் வகையில் நடந்துகொண்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும், இந்நிகழ்வில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட சமுர்த்தி அபிவிருத்தி அமைச்சர் பி.ஹரிசனுக்கு, அமைச்சர் நவீன் திசாநாயக்க வேண்டுகோள் விடுத்தார்.

நாட்டில் அரசதுறையை வலுப்படுத்துவற்காக பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகச் கூறிய அவர், இவ்வாறானதொரு நிலையில், அரசாங்க சேவையை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட அரசாங்க சேவையாளர்கள், நாட்டு மக்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் சேவைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களை இனங்கண்டு, அவர்களின் வாழ்வாதாரத்துக்காக சமுர்த்தித் திட்டத்தின் ஊடாக உதவியளிப்பதற்கும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அதிகாரிகளின் சம்பளம் மற்றும் காரியாலய தேவைப்பாடு என்பவற்றுக்காக, அரசாங்கம் 62 பில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .