2024 மார்ச் 28, வியாழக்கிழமை

’சமூக மேம்பாட்டை முன்னிலைப்படுத்தியே செயற்பட வேண்டும்’

Editorial   / 2018 ஜூன் 11 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

பதுளை மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவாகியிருக்கும் 99 பெண் பிரதிநிதிகளும் அபிவிருத்தி, சமூக மேம்பாடு ஆகியனவற்றை முன்னிலைப்படுத்தியே செயற்பட வேண்டுமென பதுளை மாவட்ட உள்ளூராட்சிமன்ற ஆணையாளர் மங்கள விஜயநாயக்க தெரிவித்துள்ளார்.

பக்கச்சார்பாக செயற்படுவதை தவிர்க்க வேண்டுமெனத் தெரிவித்த அவர், உள்ளூராட்சி மன்ற விதி முறைகளை, சட்டவாக்கங்களை முறையுடன் கற்று, அதற்கமைய நடக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

பதுளை மாவட்டத்தில் உள்ள  18 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தெரிவான  99 பெண் பிரதிநிதிகளை உள்ளடக்கிய, அரசியலில் பெண்களின் பங்களிப்பை  மேம்படுத்த கொள்கை ரீதியிலான மாற்றம் என்ற தலைப்பில், பதுளையில் நேற்றைய தினம் செயலமர்வொன்று நடைபெற்றது.

டபிள்யு.எம்.சி.நிறுவனமும், டபிள்யு.டி.சி.நிறுவனமும் இணைந்து நடத்திய இந்த செயலமர்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கருத்து வெளியிடுகையில் மங்கள விஜயநாயக்க இந்த விடயங்களைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், "பெண் உறுப்பினர்கள் தேவைப்படும் வேளைகளில், எனது ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ள முடியும். நல்ல விடயங்களுக்கு மட்டுமே கைகளை உயர்த்தி ஆதரவளிக்க வேண்டுமேயன்றி தவறான விடயங்களுக்கு தத்தமது எதிர்ப்பினைக் காட்டவும் தயங்கவும் கூடாது” எனக் கூறினார்.

இச்செயலமர்வின் ஏற்பாட்டாளரான டபள்யு.டி.சி.நிறுவன இணைப்பாளர் சந்திரா வெலகெதர தமதுரையின் போது, "தற்போதைய அரசாங்கத்தின் ஊடாக நூற்றுக்கு இருபத்தைந்து வீதப் பெண் பிரதிநிதித்துவம் என்ற சட்ட ரீதியாக அங்கீகாரம் தொடர்பில்  செய்யப்பட்டுள்ளது. இது விடயத்தில் இவ் அரசிற்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.

எனவே,அடுத்து வரும் தேர்தல்கள் பலவற்றிலும் பெண்களின் பிரதிநிதித்துவங்கள் அதிகரிக்கப்படல் வேண்டும். உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவான பெண்கள் 99 பேரும், அதி சிறப்பான சேவைகளை மேற்கொண்டு முன்மாதிரியாகத் திகழ வேண்டும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X