2024 மார்ச் 28, வியாழக்கிழமை

சின்மயா விஷன் விவகாரம்; உயர்மட்டப் பேச்சில் கடும் சொற்போர்

Editorial   / 2020 ஜூன் 14 , பி.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன் 

இறம்பொடை ஆஞ்சநேயர் கோவிலிலுள்ள சின்மயா மிஷன் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகள் தொடர்பாக, இன்று (14) நடைபெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலின்போது, கடும் சொற்போர் மூண்டது. இதனால், கூட்டத்தை இடைநடுவிலேயே கைவிடவேண்டிய நிலை ஏற்பட்டதுடன், தீர்வுகளை முன்வைப்பதற்கு ஒரு மாதகால அவகாசம் கோரப்பட்டுள்ளது. 

சின்மயா மிஷன் ஆன்மீக நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் தலைவர், பிரதம குருக்கள் உள்ளிட்ட நிர்வாக சபையினருக்கும் ஆலயத்தின் புனிதத்தன்மையைப் பாதுகாக்கும் நோக்கில் இயங்கும் அமைப்பின் பிரதிநிதிகளுக்கும், பொது மக்களுக்கும் இடையிலேயே இந்தச் சந்திப்பு நடைபெற்றது.  

மலையக மக்களுக்கு ஆன்மீக சேவையாற்றும் நோக்கிலேயே இறம்பொடை ஆஞ்சநேயர் கோவிலில், இலங்கை சின்மயா மிஷனின் நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டது என்றும் ஆரம்பத்தில் குறித்த அமைப்பு சிறப்பாகச் செயற்பட்டதாகவும் எனினும் தற்போது, சின்மயா மிஷன் வியாபார நோக்கில் செயற்பட்டு வருவதாகவும் மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.  

இந்நிலையில், நேற்று நடைபெற்ற சந்திப்பின் போதும், இது குறித்து சில இந்துக் குருமார்களால் சுட்டிக்காட்டப்பட்டது. அது மாத்திரமல்லாது, நிர்வாகத்தில் இடம்பெறும் மோசடிகள் என்று, சில பட்டியலிடப்பட்டு காட்டப்பட்டதுடன், ஆன்மீக நிறுவனம் எவ்வாறு வியாபார ஸ்தாபனமாக இயங்குகின்றது என்றும் கேள்வியெழுப்பப்பட்டது.  

அத்துடன், புனித பூமியாகக் கருதப்படவேண்டிய கோவில் வளாகத்துக்குள் அரங்கேறும் சில முறையற்றச் செயற்பாடுகள் பற்றியும் இதனால், நிர்வாகக் கட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ள களங்கள் தொடர்பாகவும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.  

கூட்டத்தில் பங்கேற்றிருந்தவர்களால் தொடுக்கப்பட்ட கேள்விகளுக்கு, சின்மயா மிஷனின் இலங்கைக் கிளை அதிகாரிகளால் உரிய பதில்களை வழங்க முடியாமல் போன நிலையில், கூட்டத்தை இடையில் கைவிடவேண்டிய நிலை ஏற்பட்டது.  

இந்நிலையில், இந்தியாவிலுள்ள தலைமை அலுவலகத்திடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், ஒரு மாதத்துக்குள் தீர்வொன்றை வழங்குவதாக மட்டுமே உறுதியளிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X