2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘சிறுநீரக பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி’

மொஹொமட் ஆஸிக்   / 2019 பெப்ரவரி 27 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த காலத்தில் தேசத்துக்கு சாபக்கேடாகக் காணப்பட்ட சிறுநீரக நோய் நிவாரணத்துக்காகக முன்னெடுக்கப்பட்ட விரிவான வேலைத்திட்டங்கள் காரணமாக, கடந்த இரண்டு வருட காலத்துக்குள் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.  

தேசிய சிறுநீரக நிதியத்தின் 628 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், கண்டி பொது வைத்தியசாலையுடன் இணைந்ததாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சிறுநீரக நோய் பராமரிப்பு, நலன்பேணல் நிலையத்தை, நேற்று முன்தினம் (25) மக்களிடம் கையளிக்கும் நிகழ்வைத் தொடர்ந்து, கண்டி கெட்டம்பே விளையாட்டரங்கில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,  

சிகிச்சை முறைகள் பலப்படுத்தப்பட்டதோடு, நோய் நிவாரணங்கள், தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமென்றும் இதன்போது, பௌதீக வளங்களைப் போன்றே மனித வளங்களும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். 

மேலும் சிறுநீரக நோயாளர்களுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் கொடுப்பனவுகள், அந்நோயால் அவதியுறும் சகலருக்கும் வழங்கப்பட வேண்டுமென்றும் அவர் கூறினார்.  

கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக போட்டியிட்டபோது தமது பிரசார நடவடிக்கைகளுக்காக கிடைக்கப்பெற்ற நிதியைக்கொண்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ஸ்தாபிக்கப்பட்ட தேசிய சிறுநீரக நிதியமானது, தற்போது உள்நாட்டு, வெளிநாட்டு நன்கொடையாளர்களின் உதவியால் நிதியமொன்றாக உருவாகியுள்ளது. அந்த நிதியத்தின் மூலமே, இந்தப் பராமரிப்பு நிலையமும் கட்டப்பட்டுள்ளது.  

இதன்போது, சிறுநீரக நோயாளர்களைக் கொண்ட 670 குடும்பங்களுக்கு, உள்ளக நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்குவதை ஆரம்பித்து வைத்தல், 500 சிறுநீரக நோயாளர்களுக்கு இரத்த அழுத்தத்தை அளவிடும் கருவியை வழங்குவதை ஆரம்பித்து வைத்தல், சிறுநீரக நோய் நிவாரணம் தொடர்பாக நாடளாவிய ரீதியில் பாடசாலை மாணவர்களிடையே நடத்தப்பட்ட போட்டித் தொடரில் வெற்றியீட்டிய கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ மாணவியருக்கு பரிசில்களையும், விருதுகளையும் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .