2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சென்கூம்ஸ் தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணிப்புறக்கணிப்பு

Editorial   / 2018 ஜூலை 25 , பி.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ், கு.புஷ்பராஜ்

தோட்ட நிர்வாகம், ஏதேச்சதிகாரப் போக்குடன் செயற்படுகிறது எனவும், அதற்குக் கண்டனம் தெரிவிப்பதாகவும் தெரிவித்து, இலங்கை தேயிலைச் சபையின் மேற்பார்வையின் கீழ் இயங்கும் டீ.ஆர்.ஐ.சென்கூம்ஸ் தோட்ட மேற்பிரிவு, கீழ்ப்பிரிவு ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், இன்று முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருவதுடன், தோட்டத்தின் கொழுந்து மடுவத்துக்கு முன்பாக, இன்று (25) காலை ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

மேற்படி தோட்டங்களைச் சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்களே, இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேற்படி இரு தோட்டங்களும், தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின், அதாவது தேயிலைச் சபையின், மேற்பார்வையில் கீழ் இயங்கும் தோட்டங்களாகும் எனத் தெரிவிக்கும் தொழிலாளர்கள், எனினும், இரு தோட்டங்களிலும் வாழும் மக்களின் சுகாதார நலன் உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும், தோட்ட நிர்வாகமானது, பாராமுகமாகச் செயற்பட்டு வருவதாகக் குற்றஞ்சாட்டுகின்றனர்.

அத்துடன் முறையான பராமரிப்பின்றி, தேயிலைக் காணிகள் காடுகளாகி வருகின்றனவெனவும், நல்ல விளைச்சலைத் தரக்கூடிய 1, 3ஏ, பி இலக்கத் தேயிலை மலைகளின் விளைச்சலும், இதனால் பாதிக்கப்பட்டுள்ளதெனவும் தொழிலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

தேயிலை மலைகள் காடாகி வருவதால், வேலைநாட்கள் குறைக்கப்பட்டு வருகின்றனவெனவும், இதனால் தாம் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேற்படி இரு பிரிவுகளும், அரசாங்கத்தின் பொறுப்பிலா அல்லது தனியார்துறையின் பொறுப்பிலா உள்ளன என்பது, தமக்குச் சந்தேகமாகவுள்ளதெனத் தெரிவித்துள்ள தொழிலாளர்கள், இதனைத் தெளிவுபடுத்துவது தோட்ட நிர்வாகத்தின் கடமையாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக, சென்கூம்ஸ் தோட்ட அதிகாரி லக்ஸ்மன் ஜெயதிலக்கவிடம் தோட்டத் தலைவர்கள், தோட்டக் கமிட்டியினர் பேசினர் எனவும், எனினும் மேற்படி அதிகாரி, அலட்சியப் போக்குடன் செயற்பட்டாரெனவும், தோட்டத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

தோட்டங்களின் அபிவிருத்தி, தேயிலை மலைகளின் பராமரிப்புத் தொடர்பில், தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் நிர்வாகத்திடமே கேட்க வேண்டும் என அவர் தெரிவித்தாரெனவும், தோட்டத் தலைவர்கள் கூறியுள்ளனர்.

எனவே, தமது பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வொன்றை பெற்றுத்தரும் வரை, தாம் பணிப்புறக்கணிப்பைக் கைவிடப்போவது இல்லை என்றும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .