2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

சோலங்கந்தையில் இருந்து சிறுத்தைக் குட்டி மீட்பு

Editorial   / 2018 ஏப்ரல் 03 , பி.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், எஸ்.சதீஸ், மு.இராமச்சந்திரன், ரஞ்சித் ராஜபக்ஷ

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா - கவரவில - பெரிய சோலங்கந்தை தோட்டத்தில், தேயிலை மலையிலிருந்து, இன்று (03), காலை 9 மணியளவில், பிறந்து நான்கு தொடக்கம் ஆறு நாட்கள் நிரம்பிய சிறுத்தைக் குட்டியொன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளதென, நல்லதண்ணி வனஜீவராசிகள் திணைக்களக் காரியாலயத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இந்தச் சிறுத்தைக் குட்டியை, தேயிலைக் கொழுந்து பறிப்பதற்காகச் சென்ற பெண் ஒருவர் கண்டு, பொலிஸாருக்கும் நல்லதண்ணி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கும் அறிவித்துள்ளார். இதையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸாரும் அதிகாரிகளும், இந்தக் குட்டியை மீட்டுள்ளனர்.

இச்சிறுத்தைக் குட்டி, போஷணை செய்யக்கூடிய நிலையில் இல்லாது இருப்பதால், இதனை உடவல மிருக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென, நல்லதண்ணி வனஜீவராசிகள் திணைக்கள உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்தக் குட்டியின் தாய், அண்மித்தே இருப்பதால், அது குட்டியைத் தேடி வரக்கூடும் என்பதால், அவதானமாக இருக்குமாறு, பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்படட்டுள்ளது.

கடந்த சில வார காலமாக, குறித்த தோட்டத்தில் சிறுத்தையின் நடமாட்டம் காரணமாக, பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாகவும், இதனால் நாளாந்தம் பட்டாசு போடப்பட்ட பின்னரே கொழுந்து பறிக்கச் செல்வதாகவும், தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

மேலும், நேற்றைய தினமும் ​பட்டாசு வெடித்து விட்டுச் சென்றதாகவும், இதனால் இந்தக் குட்டியின் தாய், குட்டியைப் போட்டுவிட்டுச் சென்றிருக்கலாம் எனவும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .