2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’தந்தையின் பெயரைப் பயன்படுத்துவது மனித உரிமை’

Gavitha   / 2020 ஜூலை 01 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது தந்தையின் பெயரைப் பயன்படுத்துவது, மனித உரிமை எனத் தெரிவித்துள்ள சுயேட்சை வேட்பாளராக நுவரெலியா மாவட்டத்தில் களமிறங்கியுள்ள, மலையக மக்கள் முன்னணியின் முன்னாள் பிரதி செயலாளர் நாயகமும் சட்டத்தரணியுமான அனுஷா சந்திரசேகரன், இந்தப் பெயருக்கு, மலையக மக்கள் முன்னணியின் தற்போதைய தலைவர் ஏன் அஞ்சுகிறார் என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

திருமணத்துக்குப் பின்னர், பெண்கள் கணவரின் பெயரைச் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று, மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே. இராதாகிருஷ்ணன் கூறியுள்ள கருத்து தொடர்பாக, தமிழ்மிரருக்கு நேற்று (30) கருத்துத் தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, சந்திரசேகரன் என்ற பெயர், மலையக மக்கள் முன்னணிக்கு மாத்திரமல்ல, முழு மலையக சமூகத்துக்கும் பெருமை சேர்க்கும் ஓர் அடையாளம் என்றும் அவர் கூறினார்.

தனது தந்தை மரணிக்கும்போது, கட்சியில் 20,000க்கும் அதிகமான அங்கத்தவர்கள் இருந்தனர் என்றும் தற்போது இதில் கால்வாசியாவது உள்ளார்களா என்பது சந்தேகமே என்றும் தெரிவித்தார்.

நுவரெலியா பிரதேச சபை இரண்டு முறை தங்களது கட்டுப்பாட்டில் இருந்தது என்றும் எனினும் தற்போது ஓர் அங்கத்தவரைக் கூட, சொந்த சின்னத்தில் தெரிவு செய்ய முடியாத நிலையே உள்ளது என்றும் கூறினார்.

பல தோட்டங்களில் ஒரு அங்கத்தவர்கள் கூட இல்லை என்றும் காரியலயங்கள் எங்கே இருக்கின்றன என்பது கூட, அங்கத்தர்களுக்குத் தெரியாது என்றும் கூறிய அவர், அங்கத்தவர்களின் வருகையும் குறைந்து வரும் நிலையில், இந்த நிலை நீடித்தால்,  இன்னும் 5 வருடங்களில் கட்சியை முழுமையாக மூடவேண்டியதுதான் என்றும் அவர் கூறினார்.

அவர் குறிப்பிட்டுள்ள உத்தியோகத்தர் பதவியை ஏன் அவர் பறித்துக் கொண்டார் என்பதராயும் அவர் தெரிவிக்கவேண்டும் என்றும் தோல்வி பயத்தால், அரசியல் கோமாளித் தனமான கருத்துக்களை தெரிவிப்பது அவரைப் பொறுத்தது என்றும் அவர் தெரிவித்தார்.

தரம் தாழ்ந்த விமர்சனங்கள் அனைத்தும் அதைத் தெரிவிப்பர்களையே தரம் தாழ்த்திவிடும் என்று கூறிய அவர் தரமான கருத்துக்களுக்கு, தான் தரமான பதில் அளிப்பேன் என்றும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .