2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தேசிய அரசாங்கம் அமைக்கும் யோசனை: ‘அதிகரிக்க ஆதரவில்லை’

Editorial   / 2019 பெப்ரவரி 07 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிப்பை மட்டும் நோக்காககொண்டு, தேசிய அரசாங்கம் அமைக்கப்படுமானால், அதற்கு ஒருபோதும் ஆதரவளிக்கப் போவதில்லை என, ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் எம்.பியுமான வேலுகுமார் தெரிவித்தார். 

தேசிய அரசாங்கம் அமைக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் உத்தேச திட்டம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக மேலும் கூறியுள்ள அவர்,  

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து, இதற்கு முன்னர் தேசிய அரசாங்கம் அமைத்திருந்ததைக் குறிப்பிட்ட அவர், தமிழ் முற்போக்குக் கூட்டணியும், அதில் பங்காளிக் கட்சியாக அங்கம் வகித்ததாகவும் கூறினார்.  

மாறுபட்ட கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் இரண்டு பிரதான கட்சிகள் இணைந்து, தேசிய அரசாங்கம் அமைத்ததால், அதன் ஆயுட்காலம் உரிய வகையில் நீடிக்கவில்லை என்றும் சர்ச்சைகளுக்கு மத்தியிலேயே, ஆட்சியைக் கொண்டு நடத்தியது என்றும் அவர் கூறினார்.  

19ஆவது திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதை மட்டுமே பாரிய வெற்றியாகக் கருதலாம் என்று கூறிய அவர், மற்றப்படி, எந்த நோக்கத்துக்காகத் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டதோ, அந்த இலக்கை நோக்கி அது நகரவில்லை என்பதே கசப்பான உண்மையாகும் என்றும் அவர் கூறினார்.  

எனவே, இனிவரும் காலங்களில், நிலையானதோர் அரசாங்கத்தை அமைக்கவும் புதிய அரசமைப்பை உருவாக்கவும் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவும் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டால் மாத்திரமே, நாட்டின் நலன் கருதி ஆதரவு வழங்கலாம் என்றும் மாறாக, தனி நபர்களைத் திருப்திப்படுத்துவதற்காகவும், அமைச்சர்கள், பிரதியமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காகவும் ஆதரவு வழங்க முடியாது என்றும் அவர் கூறினார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .