2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

தேயிலைச் செடியொன்று 25 ரூபாய்க்கு விற்பனை

Editorial   / 2018 ஜனவரி 15 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ் 

நுவரெலியா, கந்தப்பளை - பார்க் தோட்டத்தில் பிடுங்கப்படும் தேயிலைச்செடிகளை, அத்தோட்ட நிர்வாகம் விற்பனை செய்துவருகின்றது. அதனடிப்படையில், தேயிலைச் செடியொன்று 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக, தொழிலாளர்கள் தெரிவித்தனர். 

“அந்தத் தேயிலைத் தோட்டத்தில், தனி வீடுகளை அமைக்கும் நோக்கிலேயே, தேயிலைச் செடிகள் பிடுக்கப்பட்டு வருகின்றன.

அவற்றை, விறகுக்குப் பயன்படுத்துவதற்காக, தோட்ட நிர்வாகம் இவ்வாறு விற்பனை செய்துவருகின்றது” என்று, தொழிலாளர்கள் தெரிவித்தனர். 

தோட்ட நிர்வாகத்தின் இந்தச் செயற்பாட்டை, தொழிலாளர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.  

அந்தத் தோட்டத்தில், கடந்த காலங்களில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களால், தேயிலைமலை எனும் தோட்டப்பிரிவைச் சேர்ந்த 20 குடும்பத்தினர் பாதிக்கப்பட்டனர். அவர்கள், தங்களுடைய வீடுகளை இழந்து, நிர்க்கதியான நிலையில் உள்ளனர்.  

அவ்வாறானவர்கள், அத்தோட்டத்தில் உள்ள களஞ்சிய சாலையில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். அந்தக் களஞ்சியசாலை, பழைமையான கட்டடம் ஒன்றில் உள்ளது. 

இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி வீடுகளை அமைத்துக் கொடுக்கும் நடவடிக்கையை, நுவரெலியாவில் இயங்கும் பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியம் முன்னெடுத்துள்ளது. 

அதனடிப்படையில், பெகோ இயந்திரம் மூலம் தேயிலைச் செடிகளைப் பிடுங்கி அகற்றி, வீடுகளைக் கட்டுவதற்கான தளத்தை அமைக்கும் நடவடிக்கையை, கடந்த வெள்ளிக்கிழமை (12) அன்று  ஆரம்பித்தது. 

தேயிலைக் காணியை, தேயிலைச் செடிகளுடன் பெருந்தோட்ட மனிதவள நிதியம் (ட்ரஸ்ட்) பார்க் தோட்டம் நிர்வாகத்திடம் இருந்து பெற்றுக்கொண்டுள்ளது. 

இந்த நிலையில், பிடுங்கப்படும் தேயிலைச்செடிகளுக்கு, பணம் கொடுக்கவேண்டிய தேவையில்லை எனத் தெரிவிக்கின்ற தொழிலாளர்கள், அத்தோட்ட நிர்வாகம், தொழிலாளர்கள் மீது கடும்போக்கைக் காட்டுகின்றது எனத் தெரிவிக்கின்றனர்.  

ஆகவே, இந்த விவகாரத்துக்கு உரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்குமாறும், பிடுங்கப்படும் தேயிலைச் செடிகளை இலவசமாக எடுத்துச் செல்வதற்கு வழிசமைக்கவேண்டுமென்றும் அந்தத் தோட்டத் தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .