2024 மார்ச் 28, வியாழக்கிழமை

தேர்தல் பிரசார மோதலில் கண்ணாடிகள் நொறுங்கின

Editorial   / 2018 ஜனவரி 09 , பி.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், ஆ.ரமேஷ்   

மலையகத்தில், மலையக மக்கள் முன்னணி மற்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆகியனவற்றின் சார்பில் வேட்பாளர்கள் இருவரின் ஆதரவாளர்களுக்கு இடையில், கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் வைத்து, திங்கட்கிழமை மாலை 6 மணியளவில் மோதல்கள் இடம்பெற்றன.

கொட்டகலை பிரதேச சபைக்கு, மலையக மக்கள் முன்னணியின் சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளரான சைலஜா அலெக்சாண்டர் மற்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் போட்டியிடும் ​​ராஜமணி பிரசாத் ஆகிய இரண்டு வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்கும் இடையிலேயே, இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.   

இந்தச் சம்பவத்தால், பெண் வேட்பாளர் வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.   

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,   

கொட்டகலை, கொமர்ஷல் பகுதியில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்கள், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்தப் பகுதியிலேயே மலையக மக்கள் முன்னணியில் போட்டியிடும், பெண் வேட்பாளரான சைலஜா அலெக்சாண்டர் வீடும் உள்ளது.   

இந்நிலையிலேயே, அவ்வீட்டின் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. சம்பவத்தின் போது, பெண் வேட்பாளர் தனிமையில் இருந்துள்ளதாகத் தெரியவருகிறது. இந்த விவகாரம் தொடர்பில், திம்புள்ள-பத்தனை பொலிஸ் நிலையத்தில் அந்தப் பெண் வேட்பாளர், முறைப்பாடு செய்துள்ளார்.   

இதேவேளை, அந்தப் பகுதிக்கு, வாக்குகளைக் கேட்டு, வீடு வீடாக தாம் சென்ற போதிலும், வீட்டின் மீது தாக்குதல் நடத்தவோ அல்லது அச்சுறுத்தவோ இல்லையென, காங்கிரஸின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.   

இந்த விவகாரம் தொடர்பில், பெண் வேட்பாளரான, சைலஜா அலெக்சாண்டர் தெரிவிக்கையில்,   

“இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸைச் சேர்ந்த சிலர், இப்பகுதியில், வீட்டுக்கு வீடு வந்து பிரசாரப் பணிகளை மேற்கொண்டனர். அச்சமயம், தனிமையில் நான் வீட்டில் இருந்தேன். எனது வீட்டுக்கருகில் வந்த இவர்கள் தகாத வார்த்தைகளால், என்னைத் திட்டி தீர்த்தனர். எனது வீட்டின் கதவை உடைத்தது மட்டுமின்றி, வீட்டின் ஜன்னல்கள் போன்றவற்றையும் உடைத்து உள்ளே வர முயற்சித்தனர்.   

 “இதன்போது, வீட்டின் சமயலறைப் பக்கமாக இருந்த கதவைத் திறந்துகொண்டு, நான் வெளியே சென்று விட்டேன்” என்று கூறிய அவர், “பெண் வேட்பாளரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தி, வாக்கு வாங்குவதற்கு இவர்களுக்கு வெட்கம் இல்லையா?” என வினவினார்.   

இதேவேளை, இந்த விவகாரம் தொடர்பில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராஜமணி பிரசாத்திடம் வினவியபோது,   

“பிரசார நடவடிக்கைக்காக, 08.01.2018 அன்று மாலை நான் எங்கும் செல்லவில்லை. எனது ஆதரவாளர்கள் கொமர்ஷல் பகுதியில் உள்ள வீடுகளுக்குச் சென்று, எனக்கு ஆதரவாக பிரசாரங்களை மேற்கொண்டிருக்கலாம். ஆனால், இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றமை தொடர்பில் தனக்குத் தெரியாது” என்றார்.   

“கொமர்ஷல் பகுதி மக்களின் ஆதரவைத் தன்வசம் வைத்துக்கொள்ள இந்த பெண் வேட்பாளர், தனது வீட்டுக்கு தானே கல்லை அடித்துக்கொண்டு, வேட்பாளரான என்மீது பொலிஸ் நிலையத்தில் புகார் செய்திருக்கின்றமை வியப்புக்குரிய விடயமாகும்” என்றார்.   

“அதேவேளை, இவ்வாறானதொரு பிரச்சினையை உருவாக்கி அனுதாப வாக்குகளைப் பெற்றுக்கொள்வது இவரின் இலக்காக அமைந்திருக்கலாம் என நான் சந்தேகப்படுகின்றேன்” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.   

இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பில் தாம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்த திம்புள்ள-பத்தனை பொலிஸார், எவரையும் கைதுசெய்யவில்லை என்றும், விசாரணைகளுக்காக, இரு தரப்பினரையும் பொலிஸூக்கு அழைத்துள்ளதாகத் தெரிவித்தனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X