2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

நாட்டின் பிரதான நகரங்களில் எதிர்ப்புப் பேரணி

Nirosh   / 2019 பெப்ரவரி 12 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக கைச்சாத்திடப்பட்டுள்ள கூட்டொப்பந்தத்துக்கு எதிராகவும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, நாளொன்றுக்கான அடிப்படைச் சம்பளமாக, 1,000 ரூபாய் வழங்கப்படல் வேண்டுமெனக் கோரியும், நாட்டிலுள்ள பிரதான நகரங்களில் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக, ஆயிரம் ரூபாய்க்கான இயக்கம் அறிவித்துள்ளது.  

ஆயிரம் ரூபாய்க்கான இயக்கம் சார்பில், கொள்ளுப்பிட்டியில் நேற்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அந்த இயக்கத்தின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தனர்.   

இதன்பிரகாரம், எதிர்வரும் 17ஆம் திகதி ஹட்டன்- மல்லியப்பூ சந்தியிலும் 24ஆம் திகதி தலவாக்கலையிலும் இந்த எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அந்த இயக்கம் அறிவித்தது.  

கூட்டொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருந்தாலும் வேறு ஏதாவது ஒரு வழியிலாவது, தோட்டத் தொழிலாளர்களின்,  அடிப்படைச் சம்பளத்தை, நாளொன்றுக்கு 1,000 ரூபாயாக அதிகரிக்குமாறு இதன்போது ​வலியுறுத்தப்பட்டது.  

கூட்டொப்பந்தத்தில் மூன்று தொழிற்சங்கங்கள் கைச்சாத்திடும் நிலையில், இம்முறை, பெருந்​தோட்டக் கூட்டுக் கமிட்டியின் தொழிற்சங்கம் கைச்சாத்திடவில்லை என்றும் இது ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாட்டையே எடுத்துக்காட்டுகின்றது என்றும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.  

2015ஆம் ஆண்டு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் முன்னெடுக்கப்பட்ட தேர்தல் பிரசாரத்தின் போது, தோட்டத் தொழிலாளர்களுக்கு, அடிப்படை நாள் சம்பளமாக 1,000 ரூபாய் வழங்கப்படல் வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டதைக் குறிப்பிட்ட அந்த இயக்கம் தற்போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில், 20 ரூபாய் சம்பள அதிகரிப்புக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளமையால், 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலின்போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மலையகத்துக்குச் செல்வது என்பது, இலகுவான காரியமாக இருக்காது என்றும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.  

இதேவேளை, தொழிலாளர்களுக்கு எதிரான காட்டிக்கொடுப்புகளை, அமைச்சர் பழனி திகாம்பரம், இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ், நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான ஆகியோர் கைவிடவேண்டும் என்றும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.  

மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இவர்கள் அனைவரும், இந்த 1,000 ரூபாய் கோரிக்கையை ஏற்று, தங்களது நிலைப்பாட்டிலிருந்து மாறவேண்டும் என்றும் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .